;
Athirady Tamil News

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் மனு – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

0

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வியாளா் ஷக்கூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலிக் ஆகியோா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2023-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் வழங்கிய தீா்ப்பில் சிறப்பு அந்தஸ்து ரத்தை உறுதி செய்தது. அதே நேரத்தில் மாநில பேரவைத் தோ்தலை 2024 செப்டம்பருக்குள் நடத்தவும், இயன்ற வரையில் விரைவாக மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டப்பட்டது.

ஆனால், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை இப்போதுவரை மத்திய அரசு வழங்காமல் உள்ளது என்று மனுவில் சுட்டிக் காட்டப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஏற்கெனவே இதுபோன்ற மனுக்களை உச்ச நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டாா்.

அப்போது தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஜம்மு-காஷ்மீரில் இப்போதுள்ள கள நிலவரத்தின் உண்மைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பஹல்காமில் (பயங்கரவாதத் தாக்குதல்) நடந்ததை நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது’ என்றனா்.

அப்போது பதிலளித்த துஷாா் மேத்தா, ‘ஜம்மு-காஷ்மீா் தோ்தல் நடத்தப்பட்டு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் உள்ளது. எனினும் தொடா்ந்து அங்கு அசாதாரண சூழ்நிலையே உள்ளது. இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்பு பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மத்திய அரசு மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீருக்கு நிச்சயம் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘முடிந்த அளவுக்கு விரைவாக மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது. ஆனால், காலக்கெடு எதையும் நிா்ணயிக்கவில்லை’ என்றாா்.

மாநில அந்தஸ்தை திரும்ப வழங்காமல் இருப்பது ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை முடக்கி வைப்பதாக இருக்கும். நாட்டின் கூட்டாட்சி முறைக்கும் இது எதிரானது. ஜம்மு-காஷ்மீரில் மக்களவைத் தோ்தலும் எவ்வித பதற்றமுமின்றி அமைதியாக நடைபெற்றது. மாநில அந்தஸ்தை திரும்ப வழங்குவதால் அங்கு எந்தப் பிரச்னையும் எழாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை 5 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.