;
Athirady Tamil News

ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!

0

மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமையில் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த நிலையில், நாளைய கொண்டாட்டத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு செய்தி பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நகரம் முழுவதும் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள் இருப்பதாகவும், சுமார் 400 கிலோ அளவிலான வெடிபொருள் பயன்படுத்தப்படவிருப்பதாகவும் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், அதன் மூலம் ஒரு கோடி பேரை கொல்ல முடியும் என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

லஷ்கர்-இ-ஜிகாதி என்ற அனுப்புநரின் அடையாளத்துடன் பெறப்பட்ட செய்தியில், இந்தியாவுக்குள் 14 பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்தியதுடன், பயங்கரவாதத் தடுப்புப் படைக்கும் தகவல் தெரிவித்துள்ள மும்பை காவல்துறையினர், நமது பாதுகாப்புப் படைகளால் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க முடியும்.

அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். சோதனை செய்யப்படாத இடம் என்று ஒன்றுவிடாமல், அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தனர். மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.