ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை காலை (நவ.8) 3.14 மணியளவில் நிலநடுக்கம் காணப்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காபூலுக்கு அருகே 180 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
முன்னதாக, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானில் 10 கி.மீ ஆழத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
நவம்பர் 4 ஆம் தேதி வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டது. இதில் 27 பேர் பலியாகினர் மற்றும் 956 பேர் காயமடைந்ததாக தலிபானின் பொது சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷரபத் ஜமான் அமர் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் மிக பழமையான மசூதி ஒன்று சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது.