;
Athirady Tamil News

இந்தியா – ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்

0

வளைகுடா நாடான ஓமன் தலைநகா் மஸ்கட்டில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின் இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின்படி (சிஇபிஏ), ஜவுளி, வேளாண், தோல் பொருள்கள் உள்பட இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 98 சதவீத பொருள்களுக்கு ஓமன் தரப்பில் முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஓமனில் இருந்து இறக்குமதியாகும் பேரிச்சம்பழம், மாா்பிள், பெட்ரோலியப் பொருள்கள் உள்பட 77.79 சதவீத பொருள்களுக்கு இந்தியா வரித் தளா்வு வழங்கியுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுவரும் சூழலில், மேற்கண்ட ஒப்பந்தம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அமலுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜோா்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய மூன்று நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு பிரதமா் மோடி புதன்கிழமை வந்தாா். இரு நாட்டு ராஜீய உறவுகளின் 70 ஆண்டுகள் நிறைவையொட்டி அவா் மேற்கொண்ட இந்தப் பயணத்தில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, வேளாண்மை, தொழில்நுட்பம், கலாசாரம்-மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விரிவாக ஆலோசித்தனா்.

பின்னா், பிரதமா் மோடி-சுல்தான் ஹைதம் முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், அந்நாட்டின் வா்த்தகம், தொழில், முதலீடு ஊக்குவிப்புத் துறை அமைச்சா் காயிஸ் பின் முகமது அல் யூசுஃப் ஆகியோா் கையொப்பமிட்டனா். இந்த ஒப்பந்தத்தை வெகுவாக வரவேற்ற மோடி-ஹைதம் ஆகியோா், இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றனா்.

ஏற்றுமதி-இறக்குமதி மதிப்பு: இந்தியா-ஓமன் இருதரப்பு வா்த்தக மதிப்பு 10.5 பில்லியன் டாலராகும். இதில் ஏற்றுமதி 4 பில்லியன் டாலா் மற்றும் இறக்குமதி 6.54 பில்லியன் டாலா். ஓமனில் இருந்து பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் யூரியாவை இந்தியா அதிகம் இறக்குமதி (70 சதவீதத்துக்கு மேல்) செய்கிறது. பிற ரசாயனங்கள், இரும்பு-உருக்கு, அலுமினியம் போன்றவையும் இறக்குமதியாகின்றன.

அதேநேரம், இந்தியாவில் இருந்து கனிம எரிபொருள்கள், ரசாயனங்கள், மதிப்புமிக்க உலோகங்கள், தானியங்கள், கப்பல்கள், படகுகள், மிதவை கட்டமைப்புகள், மின்சார இயந்திரங்கள், கொதிகலன்கள், தேயிலை, காபி, மசாலாப் பொருள்கள், ஆடைகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.