ஆப்கனில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் பலி! ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், உணவகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபுல் நகரத்தில், சீன நாட்டினரின் வருகை அதிகமுள்ள உணவகத்தில் கடந்த ஜன. 19 அன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தானின் தலிபான் வெளியுறவு அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கான முழுமையான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள சீனர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அந்த அமைப்பு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி, ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளியிட்ட செய்தியில், சீனர்கள் அதிகம் வருகை தரும் உணவகத்திற்குள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் அங்கு திரண்டிருந்த 25 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உய்குர் இஸ்லாமியர்கள் மீதான அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டாமென சீன அரசு குடிமக்களுக்கு இன்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.