;
Athirady Tamil News

இஸ்ரேலின் தாக்குதலுக்கான அடுத்த இலக்கு எது? தகவல் வெளியீடு

0

டெல் அவிவ்

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்குதல் நடத்தியதில், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதேபோன்று 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கான அடுத்த இலக்கு எது? தகவல் வெளியீடு
இந்த நிலையில், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இன்று இஸ்ரேலை தாக்கியது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த சம்பவத்தில், 31 பேர் பலியாகி உள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது. இதுதவிர 149 பேர் காயம் அடைந்து உள்ளனர். பலியானவர்களில் 3-ல் 2 பங்கு பேர் தெற்கு லெபனானை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுபற்றி, இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று வெளியிட்ட செய்தியில், வெல்ல முடியாத ஒரு போரில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நுழைந்துள்ளது. ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுதளங்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் ராணுவம் தாக்கியது.

இதற்கு நாங்கள் தயாராகவே இருந்தோம். அதனால், உடனடியாக பதிலடி கொடுத்தோம் என தெரிவித்து உள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் இதுபற்றி இன்று கூறும்போது, ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் இஸ்ரேலின் தாக்குதலுக்கான அடுத்த இலக்காக உள்ளார் என கூறினார்.

ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதல் மற்றும் பதிலடி சம்பவங்களால் மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து போர் ஏற்பட கூடிய சூழல் காணப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.