சம்மாந்துறையில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறை
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதற்கமைய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சம்மாந்துறை பிரதேச சபையின் பங்குபற்றலுடன் பொது மக்களிடையே வலுவான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று ஹிஜ்றா சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது “விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்”- அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
அதனுடன் அரச அலுவலகங்கள், மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
