;
Athirady Tamil News

காணொளி ஆதாரத்தால் சிக்கிய முச்சக்கர வண்டி சாகசம் ; போதையில் இரு இளைஞர்கள் கைது

0

கம்பஹா, வெலிவேரிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (30) நெடுங்கமுவ முதல் மீகஹவத்த வரையிலான பிரதான வீதியில், முச்சக்கர வண்டியை ஆபத்தான முறையில் செலுத்தி இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடும் காணொளி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்குவரத்து மேலாண்மை மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதிப் காவல்துறை மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீரவின் உத்தரவின் பேரில், காவல்துறை தொழில்நுட்பக் குழுவினர் இக் காணொளியை ஆய்வு செய்து சம்பவம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதன் 23 வயதுடைய உரிமையாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் உறுதியானது. சம்பவத்தின் போது போதை மாத்திரைகளை (Intoxicating tablets) உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

சந்தேகநபர்களுக்கு எதிராக ‘ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்துதல்’ மற்றும் ‘பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயற்சித்தல்’ ஆகிய பாரதூரமான குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளது.

இந்த விதிமீறலை காணொளி எடுத்து ஆதாரமாக வழங்கிய நபருக்கு DIG சேனாதீர தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் நேரில் இல்லாத இடங்களிலும், தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தள ஆதாரங்கள் மூலம் சட்டத்தை நிலைநாட்டத் தயங்கப்போவதில்லை என அவர் இதன்போது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.