;
Athirady Tamil News

ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள்…?

0

ஈரான்,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் சுமார் 40 நாட்களாக போரிட்ட நிலையில், கடந்த 7-ந்தேதி இரவு திடீரென இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஈரான் மீதான போரை 2 வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதனால் ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்து கப்பல் போக்குவரத்து சீராக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த போர் நிறுத்தத்தை ஈரானும் ஒப்புக்கொண்டதுடன், தங்கள் தரப்பில் வழங்கப்பட்ட 10 அம்ச நிபந்தனைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும் கூறியது. பின்னர் ஹார்முஸ் நீரிணையையும் திறந்து கப்பல் போக்குவரத்துக்கு அனுமதித்தது. ஈரான் போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான், இஸ்ரேல், வளைகுடா நாடுகள் மற்றும் லெபனான் என எந்த பகுதியிலும் தாக்குதல் நடக்காது என அறிவித்தார்.

ஆனால் இந்த போர் நிறுத்தத்தில் லெபனான் உள்ளடக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அறிவித்தார். அத்துடன் நில்லாமல் லெபனானில் நேற்று முன்தினம் இஸ்ரேல் படைகள் அதிபயங்கர வான்தாக்குதல்களையும் நிகழ்த்தின. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை கண்டிராத அளவுக்கு நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க முக்கிய தலைவர் உள்பட 250-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேநேரம் இந்த தாக்குதலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்ட ஈரானும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அறிவித்தது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே சர்வதேச சட்டத்தின்படி ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சென்று வர ஈரான் அனுமதிக்கும் என துணை வெளியுறவு மந்திரி சயீத் கதிப்சாதே கூறினார்.

அதேநேரம் போரின்போது ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணி வெடிகள் பொருத்தப்பட்டதால், அந்த வழியாக கப்பல் போக்குவரத்து நடத்துவது அபாயகரமானது என ஈரான் ராணுவம் அறிவித்தது. அங்கு கண்ணிவெடி பொருத்தப்பட்டிருக்கும் இடங்களை குறிக்கும் வரைபடத்தையும் ராணுவம் வெளியிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே புதிய வழித்தடத்தில் கப்பல்கள் பயணிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, உள்ளே வரும் கப்பல்கள் ஓமன் வளைகுடாவிலிருந்து வடக்கு திசையில் லராக் தீவை நோக்கிச் சென்று, பின்னர் பாரசீக வளைகுடாவை நோக்கித் தொடர்ந்து செல்ல வேண்டும். வெளியேறும் கப்பல்கள் பாரசீக வளைகுடாவிலிருந்து, லராக் தீவின் தெற்கே கடந்து, பின்னர் ஓமன் வளைகுடாவை நோக்கித் தொடர்ந்து செல்லவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இவ்வாறு ஹார்முஸ் நீரிணை தொடர்பான தெளிவற்ற நிலையால் கப்பல்கள் அந்த நீரிணையை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. போர் நிறுத்தம் அமலான முதல் நாளான நேற்று, வெறும் 3 கப்பல்கள் மட்டுமே அந்த வழியாக சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.