;
Athirady Tamil News

மட்டக்களப்பில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுக்க முயற்சி ; அரச அதிகாரி உள்ளிட்ட குழுவிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

0

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் நீதவான் வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.

புதையல்
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இரவு, மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள காணியில் குழுவொன்று புதையல் தோண்டுவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

அதற்கமைய, அங்கு விரைந்த பொலிஸார் மொரட்டுவை , கட்டுகஸ்தோட்டை, இங்கிரியாகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்ததுடன் பூசைப் பொருட்களையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பொலன்னறுவையைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவனும் ஒருவராவார்.

குறித்த சிறுவன் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, “இந்தச் சிறுவன் தனது குடும்பத்தில் மூன்று தலைமுறையாகப் பிறந்த முதல் ஆண்பிள்ளை என்றும், ஜாதகப்படி மூன்று நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் சங்கமித்த வேளையில் பிறந்தவர் என்றும், இவரைப் பலிகொடுத்துப் புதையல் எடுக்கவே கடத்தி வரப்பட்டுள்ளார்” என்றும் மனிதாபிமானமற்ற இச்சதி குறித்து வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சிறுவனின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவரை நன்னடத்தை இல்லத்தில் வைக்குமாறும், ஏனையோரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.