;
Athirady Tamil News

கனமழையில் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி – பெங்களூருவில் பரபரப்பு

0

பெங்களூரு,

பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழையிலிருந்து தப்பிக்க சுவரின் ஓரமாக ஒதுங்கியிருந்த நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர்.

மேலும், இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே மீட்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

மேலும், துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் மற்றும் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.