பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அரசு விடுத்த எச்சரிக்கை
பிரித்தானியாவில் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு நாட்டின் தேசிய பாதுகாப்பு தீவிரமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனை உலுக்கிய கத்திக்குத்து
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன்(Golders Green) பகுதியில் புதன்கிழமை அதிகாலை நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் யூத சமூகத்தை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 45 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை டேசர்(Taser) துப்பாக்கியை பயன்படுத்தி பொலிஸார் நிலைகுலைய செய்து பின்னர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பிரித்தானிய அரசு மீது தங்களது அதிருப்தியை இஸ்ரேல் வெளிப்படுத்தியிருந்தது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இந்நிலையில் பிரித்தானியாவில் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டமானது கணிசமானதில் (Substantial) இருந்து தீவிர நிலைக்கு (Severe) அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டமானது தீவிர நிலைக்கு மாற்றப்பட்ட முடிவை பயங்கரவாத பகுப்பாய்விற்கான கூட்டு மையம் (Joint Terrorism Analysis Centre) எடுத்துள்ளது.
இவ்வாறு பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டம் தீவிர நிலைக்கு மாற்றப்பட்டால், அடுத்த ஆறு மாதத்திற்குள் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக பிரித்தானிய அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்த தகவலில், நாட்டின் அச்சுறுத்தல் மட்டம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் அடுத்த பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கருதப்படுகிறது என தெரிவித்துள்ளார்.