;
Athirady Tamil News

ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா!

0

மேற்காசிய போர் காரணமாக அமெரிக்கா, ஜெர்மனி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்க ராணுவ வீரரக்ளைத் திரும்பப் பெறவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போருக்கு நேட்டோ நாடுகள் துணை நிற்க வேண்டும் என டிரம்ப் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு, பல நாடுகள் மறுப்புத் தெரிவித்ததால் அதிருப்தியடைந்த டிரம்ப், நேட்டோ நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளை விரைவில் திரும்பப் பெறவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜெர்மனி அதிபர் ஃபிரட்ரிக் மெர்ஸ் மற்றும் டிரம்ப் இடையே சமீபமாகத் தொடர்ந்து வார்த்தைப் போர் ஏற்பட்டு வந்தது. சில நாள்களுக்கு முன் ஈரான் அமெரிக்காவை அவமானப்படுத்துவதாக மெர்ஸ் தெரிவித்திருந்தார். அதற்கு, “அவர் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை” என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் 5,000 பேரைத் திரும்பப் பெறுவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். இதில், 6 முதல் 12 மாதத்திற்குள் அவர்களைத் திரும்பப் பெறுவதாகவும், அதில் பாதிக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவின் மற்ற ராணுவத் தளங்களுக்கு அனுப்பபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை, பெண்டகன் செய்தித் தொடர்பாளர் சியன் பார்னெல் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடன் கடந்தாண்டு செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடைப்பிடிக்காததால் அடுத்த வாரம் அங்கிருந்து வரும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீதான வரியை 25% ஆக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர்களை எச்சரிக்கும் விதமாக ராணுவத்தினரைத் திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில், நேட்டோ நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் 36,436 அமெரிக்கப் ராணுவத்தினர் பணியில் இருந்தனர். இத்தாலியில் 12,662 வீரர்களும், ஸ்பெயினில் 3,814 வீரர்களும் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ரஷியாவின் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கப் படைகள் அங்கு நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தற்போது 5,000 வீரர்கள் திரும்பப் பெறப்படும் அறிவிப்பு ஜெர்மனிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஜெர்மனியிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே” என ஜெர்மனி பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜெர்மனியில் படைகளைத் திரும்பப் பெறுவது பற்றி அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக நேட்டோ நாடுகளின் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.