பூமியை சுற்றி வரும் ராக்கெட், நிலவின் மீது மோத தயாராக உள்ளது… எதற்காக, எப்போது? தெரிந்து கொள்வோம்
நியூயார்க்
விண்வெளியில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக விண்கலங்களை ஏற்றிக்கொண்டு ராக்கெட்டுகள் செல்லும். அப்படி அனுப்ப கூடிய ராக்கெட்டுகள் விண்கலங்களை இலக்கு பகுதியில் விட்டு விடும். ஒரு சில ராக்கெட்டுகள் விண்ணிலேயே எரிந்து சாம்பலாகி விடும்.
இதனால், விண்வெளியில் குப்பைகள் சேர்வது தடுக்கப்படும். பெரிய பாதிப்புகளும் இராது. எனினும், சில ராக்கெட்டுகள் பூமிக்கு திரும்பி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அந்த வகையை சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரக ராக்கெட் ஒன்று நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி 2 லேண்டர்களுடன் நிலவுக்கு புறப்பட்டு சென்றது.
2 லேண்டர்களும் நிலவை அடைந்து விட்டன. எனினும், அப்போது ஒரு லேண்டர் நிலவின் மீது மோதி விட்டது. புளூ கோஸ்ட் என்ற மற்றொரு லேண்டர் நிலவில் வெற்றியுடன் தரையிறங்கி உள்ளது. 2 வாரங்கள் செயல்பட்டு, நிலவில் சூரியன் மறையும் புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பியது. எனினும், நிலவில் சூரியன் மறைந்ததும் தன்னுடைய ஆற்றலை அது இழந்தது.
இந்த நிலையில், லேண்டர்களை இறக்கி விட்ட அந்த ராக்கெட்டின் மேல் பகுதி, தன்னுடைய வேலையை முடித்து விட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். ஆனால், அது உயர்மட்ட சுற்று வட்டப்பாதையில் சிக்கி கொண்டது. பூமிக்கு திரும்பவேயில்லை. இதனால் ராக்கெட்டுக்கு என்ன ஆனது? என விஞ்ஞானிகள் தொடர்ந்து அதனை கண்காணித்து வந்தனர்.
இதுபோன்று 1,053 முறை கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டதில், பல முறை பூமி மற்றும் நிலவு ஆகியவற்றின் சுற்று வட்டப்பாதைகளை அது கடந்து சென்றது கவனிக்கப்பட்டது. ஆனால், எதன் மீதும் மோதும் வகையில் நெருங்கி செல்லவில்லை.
இந்த நிலையில், இந்த மோதல் விரைவில் நடக்க போகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி, சுற்று வட்டப்பாதை தொடர்பான தனியார் பகுப்பாய்வாளரான பில் கிரே ஆய்வு செய்து வருகிறார். அதன் பயணம் மற்றும் வருங்காலத்தில் அதற்கு என்ன நடக்கும்? என்பது பற்றி கணித்துள்ளார்.
இதன்படி, ஆகஸ்டு 5-ந்தேதி மதியம் 1.14 மணியளவில் அது நிலவின் மீது மோதும். அப்போது மணிக்கு 8,700 கி.மீ. அல்லது ஒலியின் 7 மடங்கு வேகத்தில் அது இயங்கும் என தெரிவித்து உள்ளார்.
இதனால், யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை என கூறிய அவர், எனினும் விண்வெளியில் இதுபோன்ற குப்பைகள் சேராமல் அதனை கவனத்துடன் அகற்றுவது பற்றிய தேவையை நமக்கு உணர்த்தியுள்ளது என கூறுகிறார். அந்த ராக்கெட்டின் மேல் பகுதி, இதுவரை 26 நாட்களில் பூமியை ஒரு முறை சுற்றி வந்துள்ளது.