;
Athirady Tamil News

கிழக்கு பசிபிக் பகுதியில் படகு மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் .. 3 பேர் உயிரிழப்பு

0

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பென்டானில் போதைப்பொருளை ஒரு பேரழிவு ஆயுதமாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பென்டானிலை ஒரு சாதாரண போதைப்பொருளாகப் பார்க்காமல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ரசாயன ஆயுதமாக டிரம்ப் அரசு வகைப்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கரீபியன் மற்றும் பசிபிக் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கரீபியன் கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இதுபற்றி அமெரிக்க ராணுவத்தின் தெற்கு கட்டளைப்பிரிவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “கிழக்கு பசிபிக் பகுதியில் அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல் பாதை வழியாகச் சென்று கொண்டிருந்த படகு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த படகில் போதைப்பொருள் கடத்தப்பட்டதை உளவுத்துறை உறுதிப்படுத்தியது. இந்த நடவடிக்கையின் போது மூன்று ஆண் போதைப்பொருள் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவ படைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

 

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FSouthcom%2Fstatus%2F2051819745003942039&widget=Video

தாக்குதல் நடவடிக்கை தொடர்பான ஒரு வீடியோவையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், ஒரு படகு வேகமாக செல்வதையும், பின்னர் ஏற்பட்ட ஒரு பெரிய குண்டுவெடிப்பில் அந்தப் படகு தீப்பிடித்து எரிவதையும் காண முடிகிறது.

லத்தீன் அமெரிக்க கடல் பகுதிகளில், போதைப்பொருள் கடத்துவதாக கருதப்படும் படகுகள் மற்றும் கப்பல்களை தகர்க்கும் இந்த நடவடிக்கையானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 191 பேர் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.