;
Athirady Tamil News

ஈரானின் ரேடார், டிரோன் கட்டுப்பாட்டு தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

0

கடந்த பிப். 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. கடந்த ஏப்.9-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை. இதனால், ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன. எனினும், போர் நிறுத்தம் ஏற்படுவதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே, ஈரான் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.

டிரோன் தளம்
ஈரானின் கோருக் மற்றும் கெஷ்ம் தீவுகளில் அமைந்துள்ள ரேடார் மற்றும் டிரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தற்காப்பு நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ஈரானின் கோருக் பகுதி மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள ரேடார் நிலையங்கள் மற்றும் டிரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு தற்காப்பு தாக்குதல்களை மேற்கொண்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பதற்றம்
சர்வதேச கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் எம்கியூ-1 ரக ஆளில்லா விமானம் (டிரோன்) ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. போர் நிறுத்தம் விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.