குருநாகலில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!
குருநாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹதெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள்ளேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மாவத்தகம, வேஉட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான நீதவான் விசாரணைகளுக்காக, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் தற்போது பொலிஸ் பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.