சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வரும் வாரத்தில் வெளியிடப்படும் என கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார்.
தற்போது பரீட்சார்த்திகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடத்தப்பட்டதுடன், இதில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்கள்
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்வது குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவ விடுத்துள்ள இந்த அறிவித்தலில், ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டால், முறையான திட்டமிடல் மூலமும், தேவைப்படின் மேலதிக நேரத்தை ஒதுக்கியும் பாடத்திட்டங்களை முழுமையாக முடிப்பதற்கு அதிபர்களும் சிரேஷ்ட கல்வி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் திட்டமிடப்பட்ட திகதியிலேயே நடத்தப்படும் என்றும், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராக இருப்பதை பாடசாலைகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.