;
Athirady Tamil News

மயிலிட்டி மக்களின் காணி விடுதலைப் போராட்டம்: ஆளுநரிடம் கோரிக்கை மனு கையளிப்பு!

0
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக இரண்டு பிரதான கோரிக்கைகளைத் தமது மனுவில் முன்வைத்துள்ளனர்.

2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி (இல. 1810) முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

மயிலிட்டியில் தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியில் போராடி வரும் ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/246 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும்.

போராட்டத்தின் பின்னர் ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்து இந்த மனுவை அவர்கள் ஒப்படைத்தனர்.

மக்களின் இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், உரிய துரித நடவடிக்கைகளுக்காக அதனை உடனடியாக ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.