;
Athirady Tamil News

நாட்டில் போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

0

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, புனர்வாழ்வு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “முழு நாடும் ஒன்றாக” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பேரணியில் கலந்துகொண்டதன் பின்னர் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்கள்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப்பொருளுக்கு இரையாவதன் காரணமாக இந்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தாய்மார்களும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.

பிள்ளைகளின் கல்வி சீர்குலைந்து அவர்களின் வாழ்க்கையே இருண்டு போகிறது. இந்த மாபெரும் பேரழிவிலிருந்து நாட்டை மீட்பதற்கு பாரிய கூட்டு முயற்சி தேவை.

இதற்கிடையில், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கைதுகளின் மூலம் அரசியல் பின்னணிகளுக்கும் போதைப்பொருள் குற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் வெளிப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விடுவிப்பதற்காக கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில், சந்தேக நபர்களை ஆயுதங்களை காண்பிப்பதற்காக அழைத்துச் செல்வதாகக் கூறி நீண்டகாலம் தடுத்து வைத்து, பின்னர் அவர்களை விடுவிப்பதற்காக அரச இயந்திரங்கள் கூட பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்தச் செயற்பாட்டில் பின்னிற்கப்போவதில்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.