சீனாவில் கடும் வெள்ளம்: பண்ணையிலிருந்து தப்பிய 900 பாம்புகள்; மக்கள் அச்சம்
சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 900 பாம்புகள் வெளியேறியதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
சீனாவின் தெற்குப் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் இதுவரை சுமார் 40 பேர் பலியாகினர்.
மேசாக் புயல் காரணமாக பெய்து வரும் இத்தொடா் மழையால், சீனாவின் 62-க்கும் மேற்பட்ட முக்கிய நதிகளில் வெள்ளநீா் ஆபாயக் கட்டத்தைக் கடந்து பாய்கிறது. இதையொட்டி, அப்பகுதியில் வசித்த 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.
நான்னிங் நகரில் உள்ள அணை உடைந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். இதுவே பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது.
அதேபோல, தைவானின் தென் பகுதியில் பாவி புயல் காரணமாக கனமழை ஏற்பட்டு பல பகுதிகளில் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சீனாவில் உள்ள ஒரு பண்ணையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, பண்ணையிலிருந்த சுமார் 900 பாம்புகளும் வெள்ளத்தில் வெளியேறின. இருப்பினும், வெளியேறிய பாம்புகளில் பெரும்பாலானவை விஷமற்றவை என்றும், பாம்புகளைப் பிடிக்க மீட்புக் குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.