காங்கோவில் எபோலா தொற்றுக்கு 600 பேர் பலி!
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றுக்கு இதுவரை 600 பேர் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதுதொடர்பாக புதன் இரவு காங்கோ அரசு வெளியிட்ட தகவலின்படி,
எபோலா தொற்றின் பரவல் தொடங்கியது முதல் காங்கோ நாட்டில் 600 பேர் பலியானதாகவும், நாடு முழுவதும் மொத்தம் 1,759 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பாதிப்புகள் எதுவும் பதிவாகாத ‘ஷோபோ’ மாகாணத்தின் ‘கிசங்கானி’ பகுதியில் இரண்டு புதிய பாதிப்புகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, அதிகாரப்பூர்வமாகக் கண்டறியப்படாமலே பல வாரங்களாக இந்நோய் பரவியிருந்த நிலையில், காங்கோ அதிகாரிகள் மே 15 அன்று புதிய எபோலா நோய்த்தொற்று பரவலை அறிவித்தனர்.
எபோலா நோய்த் தொற்றுக்குக் காரணமான ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வைரஸ் ஒரு அரிதான வகையாகும். இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ கண்டறியப்படவில்லை.
இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையுடன் ஆராய்ச்சியாளர்கள் கடந்த வாரம் இதற்கான ஆய்வை தொடங்கியுள்ளனர். நிதிப் பற்றாக்குறை, சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் நோய்த்தொற்று பரவலின் மையப்பகுதியான கிழக்கு காங்கோவில் தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல்கள் ஆகியவை இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.