அதீத போதைக்கு அடிமையான இளைஞன் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவருடைய பூட்டிய வீட்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய இளைஞனே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்திற்கு அருகில் இருந்து மதுபான ரின்கள் மற்றும் ஊசி (சிரிஞ்) என்பவையும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் , சங்கானை பகுதியில் உள்ள வெளிநாட்டவரின் பூட்டிய வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் கிராம சேவையாளருக்கு அறிவித்துள்ளனர்.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் , அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கும் தகவல் வழங்கிய நிலையில் , பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்றனர்.
அதன் போது வீட்டினுள் , இளைஞனின் சடலம் அழுகிய நிலையில் , காணப்பட்டுள்ளது. அத்துடன் சடலத்திற்கு அருகில் மதுபான ரின்கள் , ஊசி மருந்து (சிரிஞ்) என்பவையும் காணப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணைகளில் , குறித்த வீடு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் உறவினருடையது எனவும் , அவர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை இளைஞன் உயிரிழந்து மூன்று நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ,மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்னர்.