;
Athirady Tamil News

செம்மணி மனித புதைகுழியை ஆய்வு செய்து காலத்தை கண்டறிந்து குற்றவாளிகளை இனம் காண வேண்டும் – ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்ட தூதுக்குழுவை வலியுறுத்திய சி.வீ.கே

0

செம்மணி மனித புதைகுழி சம்பந்தமாக தனியாக ஒரு ஆய்வை நடத்தி, எந்த காலத்தில் இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம் இதனை செய்தவர்களை அடையாளம் காண முடியும் என ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்ட தூதுக்குழுவிடம் தான் எடுத்துக்கூறியதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து தூதுவர்களுடனான சந்திப்பாக அமைந்தது. பொதுவான விடயங்கள் பற்றி எல்லாம் பேசியிருக்கிறோம்.

குறிப்பாக, அவர்கள் செம்மணி அகழ்வு தளத்திற்கு சென்றார்கள். ஆகவே அது சம்பந்தமாக தனியாகவே ஒரு ஆய்வை நடத்தி, எந்த காலத்தில் இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம் இதனை செய்தவர்களை அடையாளம் காண முடியும்.

ஏனென்றால், இந்த குறிப்பிட்ட காலங்களில் எந்த இராணுவம் ? அக்காலத்தில் யார் யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பதை இனம் காணக்கூடியதாக இருக்கும். அதன் மூலம் அந்த கொலைகளை செய்தவர்களை இனம் காணக்கூடியதாக இருக்கும்.

ஆகவே,இதை உதாரணமாக எடுத்து, இனப்படுகொலை என்பதை நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கும். குற்றவாளிகளைக் காணக்கூடியதாக இருக்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்தது, மாகாண சபை தேர்தல் சம்பந்தமாகவும் அதனை நடைமுறைப்படுத்த விரும்பினால் பழைய முறையிலேயே இதை நடத்தக்கூடியதாக இருந்தால் இலகுவாக நடத்தலாம். மாகாண நிர்வாகம் இல்லாததாலே, தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம் இல்லாததாலே, இன்றைக்கு அரசாங்க அதிகாரிகள் நிர்வாகமாக அது இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

அடுத்தது, அவர்களுடைய புலம்பெயர் உறவுகளுடைய முதலீடுகள் இங்கே வரக்கூடியதாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் செய்யக்கூடியதாக இருக்கும். விவசாய மற்றும் மீன்பிடித்துறைகளிலே மேலதிகமாக அபிவிருத்தி செய்வதன் மூலம், எங்களுடைய பொருளாதார வளர்ச்சியை கொண்டு செல்வதற்கான ஏதுவாக இருக்கும். அதற்கான ஆதரவும் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.

மற்றது, இந்த திண்மக்கழிவு பிரச்சினைகள், வடிகாலமைப்பு பிரச்சினைகள் என்பன பாரிய பிரச்சினைகளாக இருக்கிறது. அதை நவீன முறையிலே கையாள்வதற்கான உதவிகள் செய்ய வேண்டும் என்ற விஷயங்களையும் அவர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
அவர்கள் சாதகமான சில விடயங்களை கையாளக்கூடியதாக இருக்கும் என்பதாக கூறியிருக்கிறார்கள் – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.