;
Athirady Tamil News

மும்பையை உலுக்கிய நிலச்சரிவு: 8 பேர் பலி; மீட்புப் பணி நிறைவு!

0

மும்பையின் சாகினாகா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 28 வயதுடைய ஒருவரின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதியான சாகினாகாவில் உள்ள அசோக் நகரில், கனமழையைத் தொடர்ந்து அருகிலுள்ள மலையிலிருந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து குடிசைப் பகுதிகள் மீது விழுந்ததால் புதன்கிழமை அதிகாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்குச் செல்லும் பாதை குறுகலாக இருந்ததாலும், அதனால் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத சூழல் இருந்ததாலும் மீட்புப் பணிகள் சவாலாக இருந்தது .

அருகிலுள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட சத்தாம் வசீர் அலி கான், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ராஜவாடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

தீயணைப்புத் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் இடிபாடுகளை அகற்றும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டனர். காயமடைந்த ஏழு பேர் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் உடனடி நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக தலா ரூ. 50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என்று மும்பை மேயர் ரிது தாவ்டே அறிவித்திருந்தார்.

நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்து 33 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், பிற்பகல் 1.25 மணியளவில் பிரஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, தேசிய பேரிடர் மீட்புப் படை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முடித்துக்கொண்டதாக அறிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.