;
Athirady Tamil News

ஒரே எண், 2 விமானங்கள்.. அருகே வந்த அந்த நிமிடம் உஷாரான கட்டுப்பாட்டு அறை அதிகாரி – அமெரிக்காவில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

0

வாஷிங்டன்,

விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் சாதுரியத்தால் அமெரிக்காவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும், விமான பயணத்தின் பாதுகாப்பு தொடர்பான வலுவான கேள்விகள் எழுந்துள்ளன.

ஒரே எண் கொண்ட விமானங்கள்
‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனத்தின் சார்பில், சிகாகோ மற்றும் பீனிக்ஸ் விமான நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களுக்கு ‘பிளைட் 2482’ என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகாகோவில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு செல்லும் விமானம் வான் பரப்பில் இருக்கும்போது, மறுமார்க்கத்தில் வரும் விமானம் அதே வான் பரப்பில் இல்லாத வகையில் அட்டவணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி இரவு 11.45 மணிக்கு பீனிக்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிகாகோ நோக்கி ஒரு ‘பிளைட் 2482’ விமானம் புறப்பட இருந்தது. அதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது இரவு 10.43 மணிக்கு மற்றொரு ‘பிளைட் 2482’ விமானம் சிகாகோவில் இருந்து பீனிக்ஸ் விமான நிலையத்திற்கு வந்து சேர இருந்தது.

தாமதமாக வந்த விமானம்
ஆனால் அன்றைய தினம் சிகாகோ-பீனிக்ஸ் விமானம் சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக, அதாவது நள்ளிரவு 12.13 மணிக்கு பீனிக்ஸ் விமான நிலையத்திற்கு வந்தது. இதற்கிடையில், ஏற்கனவே புறப்பட தயாராகி இருந்த பீனிக்ஸ்-சிகாகோ விமானம் சரியாக 11.59 மணிக்கு டேக்-ஆப் ஆனது. இதனால் ஒரே எண் கொண்ட அந்த 2 விமானங்களும் ஒரே நேரத்தில், வான் பரப்பில் அருகருகே பறக்கும் சூழல் உருவானது.

உஷாரான அதிகாரி
இந்த சூழலில், பீனிக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிடம் சிகாகோ-பீனிக்ஸ் விமானத்தின் பைலட் அனுமதி கோரினார். அந்த சமயத்தில் பணியில் இருந்த கட்டுப்பாட்டு அதிகாரி, சற்று முன்புதான் ‘பிளைட் 2482’ என்ற விமானத்திற்கு டேக்-ஆப் அனுமதி கொடுத்திருந்தார். மறுபடியும் அதே எண் கொண்ட விமானம் தரையிறங்க அனுமதி கோரியதால் அவர் உஷாரானார்.

இந்த சில நிமிட இடைவெளியில் சாதுரியமாக சிந்தித்த அவர், இரவு 10.43 மணிக்கு வந்திருக்க வேண்டிய விமானம் தாமதமாக வந்திருப்பதை கண்டுபிடித்தார். உடனடியாக இரண்டு விமானங்களின் பைலட்டுகளுக்கும் இந்த தகவலை அவர் தெரியப்படுத்தினார். பின்னர் அந்த 2 விமானங்களும் பாதுகாப்பான தூரத்தில் பயணம் செய்வதை உறுதி செய்தார்.

அசம்பாவிதம் தவிர்ப்பு
அதனை தொடர்ந்து, விமானம் தரையிறங்குவதற்கு அவர் அனுமதி அளித்தார். விமானமும் பத்திரமாக தரையிறங்கியது. கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் சமயோசித செயலால் ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அதிகாரி கூறுகையில், தனது 25 அண்டுகால அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், ஒரே எண் கொண்ட 2 விமானங்கள் எப்படி வான் பரப்பில் அருகருகே வந்தன? விமானங்களின் பயணத்தை சரியான நேரத்திற்கு ஏன் திட்டமிடவில்லை? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.