;
Athirady Tamil News

ஒடிசாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற பனாமா நாட்டு கப்பல் வங்கக்கடலில் மூழ்கியது

0

புதுடெல்லி,

பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.வி. ஓசேன் வின்னர் என்ற சரக்கு கப்பல், ஒடிசாவில் இருந்து 1,700 டன் ஹெமடைட் மற்றும் மேக்னடைட் போன்ற இரும்புத் தாதுக்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. கப்பலில் 24 மாலுமிகள் இருந்தனர். இவர்களில் சீனாவைச் சேர்ந்தவர்கள் 20 பேர், மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் 3 பேர், ஒருவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்.இந்த கப்பல் வங்கக்கடலில் ஒடிசா மாநிலத்தின் பாராதீப் கடற்கரையில் இருந்து சுமார் 240 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலில் மூழ்கத் தொடங்கியது. நேற்று பகல் 11.48 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கப்பலை இயக்கும் நிறுவனம் ஸ்ரீவிஜயபுரத்தில் உள்ள கடல்சார் ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் கொடுத்தது.இதையடுத்து கப்பலின் மாலுமிகள் அவசர அழைப்பு கொடுத்தனர். உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்காக கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினர் அங்கு விரைந்தனர்.

2 பேர் மீட்பு
இந்திய கடலோர காவல் படை, அப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பிற வணிகக் கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுத்து, மீட்புப் பணியில் ஈடுபடச் செய்தது. ஐசோபோஸ் என்ற வர்த்தகக் கப்பலும் அங்கு அனுப்பப்பட்டது.உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 2 பேர் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற 22 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் உதவியுடன் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.தொடர்ந்து வரத் மற்றும் அன்மோல் ஆகிய கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. தேடுதல் பணிக்காக ஸ்ரீவிஜயபுரத்தில் இருந்து விஜித் கப்பலும் அனுப்பப்பட்டது. கடலில் மூழ்கிய கப்பல் 225 மீட்டர் நீளமும், 32.26 மீட்டர் அகலமும் கொண்டது.

கப்பல்களுக்கு எச்சரிக்கை
எம்.வி. ஓசேன் வின்னர் கப்பல் மூழ்கிய பகுதியில் நிற்கும் மற்ற கப்பல்களுக்கு கடலோர காவல் படை எச்சரிக்கை செய்துள்ளது. மீட்புப் பணியில் அந்தக் கப்பல்களும் உதவி அளிப்பதற்காக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறோம் என்று காவல்துறை உயர் அதிகாரி கூறினார். கப்பல் மூழ்கியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் கப்பல் மூழ்கியதா? அல்லது மோசமான வானிலையால் மூழ்கியதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தேடுதல் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.