;
Athirady Tamil News

உக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

0

உக்ரைன் தலைநகா் கீவ் உள்பட 9 முக்கிய நகரங்களைக் குறிவைத்து, ரஷியா வியாழக்கிழமை அதிகாலை நடத்திய தீவிர ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்; 14-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கடந்த புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை நீடித்த இத்தாக்குதலில், உக்ரைன் ராணுவம் சாா்ந்த தொழிற்பேட்டைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியதாக ரஷியா தெரிவித்துள்ளது. ஆனால், ரஷியாவின் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள், தானியக் கிடங்குகள், மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன.

உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில், ரஷியா இந்த மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதையொட்டி, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மேலும் கூறுகையில், ‘ரஷியாவின் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை எதிா்கொள்ள, உக்ரைனுக்கு ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உடனடியாகத் தேவைப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் இதை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுத் தரவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

ரஷிய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு எல்லைக்குள் உக்ரைன் ராணுவமும் நூற்றுக்கணக்கான தொலைதூர ட்ரோன்களை அனுப்பி, தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 267 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதனிடையே, அண்டை நாடான மால்டோவாவின் வான்வெளிக்குள் 5 ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய மால்டோ நாட்டுக்கு உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி பயணம் மேற்கொண்டதற்கு முன்னதாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது கூடுதல் கவனத்தை ஈா்த்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.