;
Athirady Tamil News

நேபாளத்தில் தொடரும் சோகம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு: 3 ஆயிரம் பேரை காணவில்லை

0

காத்மாண்டு,

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் சிக்கி தற்போது வரை 682 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

புரட்டிப்போட்ட வெள்ளம்
நேபாளம்-திபெத் எல்லை அருகே கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று வரை 600-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன.

இது நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 682 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் மருத்துவமனை பிணவறைகளில் குவிந்துள்ளன. இதனால் புதிதாக வரும் உடல்களை வைக்க இடம் இல்லாமல் மருத்துவமனை நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. எனவே தற்காலிக பிணக்கிடங்குகள் உருவாக்கப்பட்டு உடல்களை சேமிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.

5-வது நாளாக மீட்புப்பணி
அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இன்னும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பற்றிய தகவல் இல்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மாயமானவர்களில் தமிழர்கள் உள்பட 167 இந்தியர்களும் அடங்கியிருப்பதால் இந்தியாவிலும் தொடர்ந்து சோகம் நிலவி வருகிறது. மேலும் இந்திய வம்சாவளியினர் 128 பேரும் மாயமாகி இருப்பதாக மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாக இன்றும் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. இரவு-பகலாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று வரை 4,451 பேரை மீட்டுள்ளனர்.

யுனிசெப் எச்சரிக்கை
இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மனிதாபிமான உதவிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக யுனிசெப் (UNICEF) எச்சரித்துள்ளது. தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவிகள் வந்து சேரத் தொடங்கியுள்ளன. குறைந்தது 17,000 குழந்தைகளுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக யுனிசெப் எச்சரித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் 18 பள்ளிகள் முழுமையாக அழிக்கப்பட்டன மற்றும் 20 பள்ளிகள் சேதமடைந்தன; இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரால் குறைந்தது 93,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) மதிப்பிட்டுள்ளது. தேவைகள் பரவலாக இருந்தாலும், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மனிதாபிமான உதவிகள் தற்போது சென்றடைந்து வருகின்றன.

கண்காணிப்பு பணியில் இந்தியா
கனரக ட்ரோன்கள், டிஎன்ஏ பரிசோதனைக் கருவிகள் மற்றும் உடல்களை உறையவைக்கும் சேமிப்பு அலகுகள் உள்ளிட்ட நிதி மற்றும் சிறப்பு மீட்பு உதவிகளுக்காக நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின் புனரமைப்புச் செலவு பல பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் கூறினார். நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, வெள்ளத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கண்காணிக்கும் நோக்கில், இந்தியா பனிப்பாறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கோஷி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
நேபாளத்தின் கோஷி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நுவாகோட், ரசுவா, தாடிங் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களை மீட்க நடவடிக்கை
இதுவரை மீட்கப்பட்டுள்ள 4,451 பேரில் 113 இந்தியர்கள் உள்பட 163 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அடங்குவர். நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, வினோத், தென்னரசு ஆகிய 4 பேரும் கடந்த 27-ந்தேதி டெல்லி சென்றனர்.

நேபாளத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களை சேகரித்து, மத்திய அரசு, நேபாள அரசுக்கு தகவல் தெரிவித்து அவர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில் 21 தமிழர்கள் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பி னர். தொடர்ந்து நேற்றும் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் திடீர் போராட்டம்
நேபாளத்தில் சிக்கித்தவித்த மேலும் 219 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏற்கனவே மாயமான 49 பேர் பற்றிய விவரம் தெரியாததால் சென்னையில் நேற்று உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


You might also like

Leave A Reply

Your email address will not be published.