;
Athirady Tamil News

தென்கிழக்கு மருத்துவப் பீடத்தை மல்வத்தையில் அமைப்பதே சிறந்தது- உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்  

0
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட மருத்துவப் பீட அமைவு மற்றும் கற்பித்தல் வைத்தியசாலைத் தேர்வு தொடர்பில் இலங்கை உலமா கட்சி மிக முக்கிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

இது குறித்து இலங்கை உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

“மூன்று சமூகங்களுக்கும் பொருத்தமான மையப் பகுதியான மல்வத்தையில் மருத்துவப் பீடத்தை அமைத்து, அம்பாறை பொது வைத்தியசாலையை அதன் கற்பித்தல் (மருத்துவப் படிப்புக்கான) வைத்தியசாலையாக இணைப்பதே மிகவும் பொருத்தமான தீர்வாகும். இன ரீதியான முரண்பாடுகள் இன்றி அனைத்து சமூக மாணவர்களும் பயன்பெறும் வகையிலும், நிர்வாக ரீதியான வசதிகளைக் கருத்திற் கொண்டும் இந்நடவடிக்கை அமைய வேண்டும்.”

“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவப் பீடத்தை உருவாக்கும் முயற்சியில் முதன்முதலில் இறங்கியவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ஆவார். பின்னர் அரசாங்கத்தில் நிதி இல்லை எனக் கூறி அவ்விஷயம் கைவிடப்பட்டபோது, அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் அதற்குரிய நிதியைப் பெற்றுத்தர எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.”

தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பயிற்சி வைத்தியசாலையாகக் கல்முனை ஆதார வைத்தியசாலையை அமைக்க முடியும் எனக் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகிறார். ஆனால், இன ரீதியான முரண்பாடுகள் நிறைந்த சூழலில் கல்முனை ஆதார வைத்தியசாலை இதற்குப் பொருத்தமானதாக இருக்காது. தென்கிழக்கில் பயிலும் முஸ்லிம் மாணவிகளின் ஆடைக் கலாச்சாரத்திற்குக்கூட அங்கு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கல்முனை ஆதார வைத்தியசாலையைப் பயிற்சி வைத்தியசாலையாக அமைப்பது சாத்தியமற்றது” என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.