ஜார்க்கண்ட்டில் சாலை விபத்தில் அமைச்சரின் மகள் உயிரிழப்பு
ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் அமைச்சர் தீபிகா பாண்டே சிங் மகள் த்ரிஷா சிங் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்தில் அமைச்சரின் மகள் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் தீபிகா பாண்டே சிங். இவரின் மகளான த்ரிஷா சிங், 3 பேருடன் காரில் பயணித்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில், ஜாம்ஷெட்பூரில் மரைன் டிரைவ் சாலையில் பயணித்த போது, லாரியில் கடுமையாக மோதியது.
இந்த விபத்தில் கார் சிதிலமடைந்ததில், காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காரில் இருந்த 4 பேரையும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இது குறித்து காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில், சக அமைச்சரும் சகோதரியுமான திருமதி தீபிகா பாண்டே சிங் அவர்களின் மகள் மற்றும் பிறர் உயிரிழந்தார் என்ற மிகவும் வேதனையளிக்கும், நெஞ்சைப் பிழியும் செய்தி என் இதயத்தை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்கள் பிள்ளையை இழக்கும் வலி, எந்தவொரு பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாததும் தாங்க முடியாததும் ஆகும். இந்த மிகவும் கடினமான நேரத்தில், சகோதரி தீபிகா அவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களுக்கு மராங் புரு சாந்தியை வழங்கட்டும், மேலும் இந்த பெரும் துயரத்தைத் தாங்கிக்கொள்ள துயருற்ற குடும்பங்களுக்கு வலிமையை அளிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.