;
Athirady Tamil News

சிறிலங்கன் எயார்லைன்ஸ் வழங்கும் அவசர எச்சரிக்கை

0

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடி நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அந்த விமான சேவை நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமான சேவை நிறுவனத்தின் பெயரில் இயங்கும் போலியான கையடக்கத் தொலைபேசி செயலிகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் ஊடாக இடம்பெறக்கூடிய நிதி மோசடிகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் மற்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்புகள் ஊடாகப் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்
அத்துடன், OTP குறியீடுகள், வங்கி அட்டைகளின் PIN இலக்கங்கள் மற்றும் ஏனைய இரகசியத் தகவல்களை எவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, Apple App Store அல்லது Google Play Store போன்ற உத்தியோகபூர்வ செயலி தளங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போதும் ஏனைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போதும்,சிறிங்கன் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்துவது அல்லது அதன் உத்தியோகபூர்வ வாடிக்கையாளர் சேவை வழிகள் ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்வது சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்து, மோசடிகளில் சிக்காமல் விழிப்புடன் செயற்படுமாறும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.