கண் இமைக்கு மேல் பல்..டாக்டர்கள் அதிர்ச்சி
நியூயார்க்,
இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் கண் இமைக்கு மேல் 2 பற்கள் வளர்ந்திருந்ததால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆரம்பத்தில் கட்டி என நினைத்துள்ளனர். பின் வெள்ளையாக எலும்பு போல தென்பட்டதால் மருத்துவரை அணுகியபோது, வாய்க்குள் வளர வேண்டிய பல் இடம்பெயர்ந்து அங்கு வளர்ந்தது தெரியவந்துள்ளது. இதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டர்கள், இது போன்ற சம்பவம் நடந்தது உலகிலேயே முதல்முறை என தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரை மூலம் இந்த அரிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அக்கட்டுரைப்படி, இந்தியாவை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு இடது கண்ணுக்கு மேலே வீக்கம் ஏற்பட்டுள்ளது. அது வலிக்கவில்லை என்பதால் ஆரம்பத்தில் அது ஒரு சாதாரண கட்டி என்று பெற்றோர் நினைத்துவிட்டனர்.
சில நாட்களுக்குள், கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் உள்ள தோலில் இருந்து இரண்டு கடினமான, வெள்ளை நிறக் கட்டிகள் வெளித் தெரிய தொடங்கின.
கவலையடைந்த சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள், அவனுக்கு சி.டி ஸ்கேன் மற்றும் பிற சோதனைகளை செய்தனர். ஸ்கேன் ரிப்போர்ட்டை கண்ட மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மருத்துவ ரீதியாக, வாயை தவிர உடலின் மற்ற பகுதிகளில் வளரும் பல் ‘இடம்பெயர்ந்த பல்’ (ectopic tooth) என்று அழைக்கப்படுகிறது. சில சமயங்களில், இத்தகைய பற்கள் அண்ணத்திலும் மூக்கின் உள்ளேயும் வளரும்..
ஆனால், மருத்துவ வரலாற்றில் கண் இமைக்குள் ஒரு பல் வளர்வது இதுவே முதல் முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வு அறிக்கையின் இணை ஆசிரியரான டாக்டர் மேகனா தன்வார், “கண்ணுக்கு மேலே, ஒரு பல் முளைத்திருப்பது உலகில் இதுவே முதல் மற்றும் ஒரே நிகழ்வாகும்” என்று கூறினார்.
பொதுவாக, மரபணுப் பிரச்சனைகள் அல்லது முகத்தில் ஏற்படும் கடுமையான காயங்கள் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படலாம்.
ஆனால், இந்த சிறுவனின் விஷயத்தில் அப்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். இந்த ஒற்றைப் பல் தற்செயலாக தவறான இடத்தில் உருவாகியுள்ளது என்று அவர் முடிவுக்கு வந்துள்ளனர்.
டாக்டர்கள் சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அந்தப் பல்லை அகற்றினர்.
இந்த நிகழ்வு குறித்து டாக்டர் மேகனா தன்வார் கருத்துத் கூறுகையில், “இது எங்களுக்கு மட்டுமல்ல, உலகிலேயே இது போன்ற முதல் நிகழ்வாகும். இந்த நிகழ்வைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம்” என்றார்.