;
Athirady Tamil News

மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல்

0

இலங்கையின் கடலோர வலய எல்லைக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பில், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளரால் இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் சட்டத்தின் (மற்றும் அதன் திருத்தச் சட்டங்களின்) கீழ், உரிய அனுமதிப்பத்திரமின்றி கடலோர வலய எல்லைக்குள் எவ்வித கட்டுமானங்களையோ அல்லது வணிகக் கூடங்களையோ அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

திணைக்களப் பொறியியலாளர் மற்றும் கள உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய பரிசோதனையின் போது, மருதமுனை கடற்கரையை அண்டிய பகுதியில் (முன்மொழியப்பட்ட கடலோர வலய எல்லையிலிருந்து 25 மீட்டருக்குள்) எவ்வித சட்டபூர்வ அனுமதியுமின்றி தற்காலிக மற்றும் நிரந்தரச் சட்டவிரோதக் கூடங்கள் மற்றும் வணிக நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இவ்வறிவித்தல் கிடைக்கப்பெற்று அல்லது குறித்த இடத்தில் ஒட்டப்பட்டு 07 நாட்களுக்குள் (2026 அக்டோபர் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு முன்னர்) சட்டவிரோதக் கட்டுமானங்களையும் அதனுள்ளே இருக்கும் பொருட்களையும் சொந்தச் செலவில் முழுமையாக அகற்றி, கடற்கரைப் பகுதியை பழைய நிலைக்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றத் தவறினால், சட்ட விதிமுறைகளின் படி உரிய நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.திணைக்களத்தினால் அக் கட்டுமானங்கள் முழுமையாக இடித்து அகற்றப்படும்.அவ்வாறு அகற்றும் போது ஏற்படும் எவ்வித சேதங்களுக்கும் அல்லது பொருட்களின் இழப்புகளுக்கும் அரசாங்கமோ அல்லது இத்திணைக்களமோ பொறுப்பேற்காது.அத்துடன், இடித்து அகற்றுவதற்கு ஏற்படும் முழுச் செலவினங்களும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்தே சட்டபூர்வமாக அறவிடப்படும் எனவும் பிராந்திய பொறியியலாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.