;
Athirady Tamil News

ஏமன் மீது சவுதி வான்வழி தாக்குதல் – 14 பேர் பலி

0

சனா,

ஏமன் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் உள்நாட்டுப்போர்

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஏமனின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதேவேளை, எண்ணெய் வளம் மிக்கப்பகுதிகளை அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தீவிரமடையும் மோதல்

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது.

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தி வருகிறது.

சவுதி தாக்குதல் – 14 பேர் பலி

இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அல் ஜப் மாகாணம் அல் ஹம்ஸ் நகரில் உள்ள சந்தை மீது சவுதி அரேபியா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.