;
Athirady Tamil News

தீபாவளிக்காக சொந்த நாடு திரும்பிய நபர்: உயிரைப் பறித்த பார்க்கிங் பிரச்சினை

0

தீபாவளிக்காக இந்தியா திரும்பிய ஒருவர், பார்க்கிங் பிரச்சினை காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் பணிபுரிந்துவரும் ஒருவர், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இந்தியா திரும்பிய நிலையில், சிறிய பிரச்சினை ஒன்று அவரது உயிரையே பறித்துவிட்டது.

உயிரைப் பறித்த பார்க்கிங் பிரச்சினை
பரம்ஜீத் தங்கர் (42), சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்த நிலையில், குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக இம்மாதம் 5ஆம் திகதி இந்தியா திரும்பியுள்ளார்.

பரம்ஜீத் குடும்பம், ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் என்னுமிடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் முதல் தளத்தில் வாழ்ந்துவந்த நிலையில், அதே குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் மோகன் என்னும் மோனு ஷர்மா என்பவரது குடும்பம் வாழ்ந்துவந்துள்ளது.

தங்கள் காரை எங்கு பார்க்கிங் செய்வது என்பது தொடர்பில் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஜிம்முக்கு சென்று திரும்பிய பரம்ஜீத், தனது கார் பார்க் செய்யுமிடத்தில் மோகனின் கார் நிறுத்தப்பட்டுள்ளதைக் கண்டு, அவரை அழைத்து காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளார்.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, மோகன் தனது துப்பாக்கியை எடுத்து பரம்ஜீத்தை சரமாரியாக சுட்டுள்ளார்.

மோகன் 15 முறை துப்பாக்கியால் சுட்ட நிலையில், 9 குண்டுகள் பரம்ஜீத் மீது பாய, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உடனே, தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் மோகன்.

என்றாலும், பொலிசார் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்துவிட்டார்கள்.

பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், பண்டிகையைக் கொண்டாட வந்த பரம்ஜீத் கொல்லப்பட்டதால் அவரது குடும்பம் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.