பாலியல் வன்கொடுமை; பாகிஸ்தானின் துணை பிரதமர் பேரன் உள்பட 8 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு
கராச்சி
வெளிநாட்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாகிஸ்தானின் துணை பிரதமர் பேரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பாகிஸ்தானின் துணை பிரதமர் இஷாக் தாரின் பேரன் முகமது ரசா தார். இவருக்கு எதிராக வெளிநாட்டு இளம்பெண்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதில், வழக்குடன் தொடர்புடைய ரசா உள்ளிட்ட 8 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
வெளிநாட்டு பெண்கள்
இதில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஸ்டெபானி அட்னனா மற்றும் வெனிசுலாவை சேர்ந்த அஸ்த்ரித் ராபின்சன் ஆகிய 2 வெளிநாட்டு பெண்கள் நடத்தி வரும், இவர்களுடைய கிரிப்டோட கரன்சி நிறுவனத்தில் முகமது ரசாவை முதலில் முதலீடு செய்ய வைத்தனர். அப்போது, அதில் லாபம் கிடைத்தது.
அதிக லாப தொகை கிடைத்ததும், முகமது ரசா, அடுத்து 5 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் பெரிய தொகையை அதில் மீண்டும் முதலீடு செய்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கான லாப தொகையையோ அல்லது முதலீட்டு தொகையையே அந்த பெண்கள் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.
மிரட்டல்
இதனை தொடர்ந்தே ரசா சூழ்ச்சி செய்து, வேறொரு முதலீட்டாளரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் என கூறி அவர்கள் இருவரையும் பாகிஸ்தானுக்கு அழைத்துள்ளார். அவர்களும் சென்றுள்ளனர்.
அவர்களை லாகூரில் உள்ள வீடு ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர்களை பணய கைதியாக பிடித்து வைத்து, பணம் திருப்பி தரும்படி வற்புறுத்தி, மிரட்டி உள்ளனர். இருவரும் தப்பி செல்ல முடியாதபடிக்கு, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதமேந்திய நபர்கள் வெளியே பாதுகாப்பாக நின்றனர்.
பாலியல் வன்கொடுமை
பணம் தரவில்லை என்றால், கொலை செய்து, உடல் பாகங்களை விற்று விடுவோம் என்று அச்சுறுத்தி உள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 500 அமெரிக்க டாலரை பணபரிமாற்றம் செய்தனர். இதன்பின்னர், முகமது ரசா மற்றும் அவருடைய 4 நண்பர்கள் இணைந்து 2 பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்தனர் என கூறப்படுகிறது. முதலில், முகமது ரசா உள்ளிட்டோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
எனினும், அவர்கள் மீது 2 பெண்களும் புகார் அளித்து விட்டு சொந்த நாடு திரும்பினர். இந்த சூழலில், லாகூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை இன்று நடந்தது.
நீதிபதி உத்தரவு
அதில், முகமது ரசா உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக, நீதிபதி ரபாகத் அலி கொண்டல், குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததுடன், வழக்கறிஞர் அதற்கான சான்றுகளை டிசம்பர் 9-ந்தேதிக்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். அதன்பின்னரே வழக்கு விசாரணையை தொடங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், இந்த வழக்கில் குற்றம் எதுவும் செய்யவில்லை என ரசா உள்ளிட்ட 8 பேரும் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.