;
Athirady Tamil News

கடத்தல் மிரட்டல் எதிரொலி: கொல்கத்தாவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் சேவை ரத்து

0

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து மும்பை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தை கடத்தப் போவதாக விடுக்கப்பட்ட மிரட்டலைத் தொடர்ந்து உடனடியாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து நேற்று காலையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மும்பை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானத்தின் கழிப்பறை கண்ணாடியில், ‘விமானம் கடத்தப்படும்’ என எழுதப்பட்டிருந்த மிரட்டல் செய்தி கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான ஓடுதளத்தில் புறப்படுவதற்கு ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்த நிலையில், இந்த மிரட்டல் குறித்து ஊழியர்கள் உடனடியாக விமானியிடம் தெரிவித்தனர்.

விமானி உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விமானம் உடனடியாக ஓடுதளத்தில் இருந்து அகற்றப்பட்டு, பாதுகாக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மத்திய தொழிற்படைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்கள் விமானத்திற்குள் ஏதேனும் வெடிபொருட்களோ அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்களோ உள்ளதா என அங்குலம் அங்குலமாகத் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.

கண்ணாடிக் கழிப்பறையில் இந்த மிரட்டல் செய்தியை எழுதியது யார், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினரும், பாதுகாப்பு முகமைகளும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதற்காக விமான நிலைய வளாகம் மற்றும் விமானத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.