;
Athirady Tamil News

சுமந்திரன் குழுவின் அமெரிக்கப் பயணம் சொல்லும் செய்தி !! (கட்டுரை)

0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழுவொன்று நேற்று புதன்கிழமை அமெரிக்கா சென்றுள்ளது.

அமெரிக்காவின் அழைப்பின் பேரில் சென்றுள்ள இந்தக் குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனும் முன்னாள் சட்ட விரிவுரையாளரான கலாநிதி நிர்மலா சந்திரஹாசனும் உள்ளடங்குகின்றனர்.

இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை, சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சந்தித்து, பேச்சுகளை நடத்தியிருந்தார். இதன்போது, அரசியலமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, கூட்டமைப்பின் சார்பில் நிபுணர்கள் குழுவொன்றை அனுப்புமாறு அமெரிக்கத் தூதுவர் கோரினார். இதன் அடிப்படையிலேயே, சுமந்திரன் தலைமையிலான குழு, அமெரிக்கா சென்றுள்ளது.

வழக்கமாக சம்பந்தன் தலைமையில், சுமந்திரன் உள்ளடங்கியவர்களே இவ்வாறான சந்திப்புகளுக்குச் செல்வது வழக்கம். ஆனால், உடலளவில் தளர்ந்துள்ள சம்பந்தன், தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார். அதனாலேயே, சுமந்திரன் தலைமையில், தனக்கு நெருக்கமான அதேவேளை துறைசார் நிபுணர்களைத் தெரிவு செய்து, அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கிறார்.

சுமந்திரன் தலைமையிலான இந்தக் குழு தொடர்பில், ஆரம்பத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய தரப்புகளுக்கு இடையில் எதிர்க்கருத்துகள் எழும் சூழல் நிலவியது.

ஆனால், கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போதே, நிபுணர் குழுவை அனுப்புமாறு, அமெரிக்கத் தூதுவர் கோரினார் என்கிற விடயம் சுட்டிக்காட்டப்பட்டதும், பங்காளிக் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைதியாகிவிட்டார்கள்.

அதுமாத்திரமின்றி, அரசியலமைப்பு தொடர்பில், துறைசார் நிபுணத்துவம் உள்ளவர்களையே அமெரிக்கா அழைத்தது என்கிற அடிப்படையில், பங்காளிக் கட்சிகள் அமைதி காக்க வேண்டிய வந்தது.

அதேவேளை, அரசியலமைப்பு தொடர்பிலான உரையாடல்களுக்காகவே சுமந்திரன் குழு, அமெரிக்காவின் அழைப்பின் பேரில் மாத்திரமல்லாமல், இந்தியாவின் அனுசரணையுடனும்தான் அமெரிக்கா செல்கின்றது என்கிற விடயம், இராஜதந்திர மட்டங்களில் வெளிப்பட்டதும், கடந்த காலங்களில் சுமந்திரனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய தரப்புகளும் இம்முறை அமைதிகாத்துவிட்டன.

இதனால், விடயம் ஓரளவுக்கு அமைதியோடு அணுகப்பட்டிருக்கின்றது. அதிலும், சி.வி.விக்னேஸ்வரன், “அந்தக்குழு, ஆக்கபூர்வமான உரையாடல்களை நடத்திவிட்டு வர வேண்டும்” என்றவாறு, ஆதரவான கருத்துகளை முன்வைத்து இருக்கிறார்.

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக்குழு, புதிய அரசியலமைப்புக்கான முதல் வரைபை, ஏற்கெனவே தயாரித்துவிட்டது.

இந்த நிலையில்தான், இலங்கையில் சீனா செலுத்திவரும் ஆதிக்கத்துக்கு எதிராக, அமெரிக்காவும் இந்தியாவும் புதிய அரசியலமைப்பு என்கிற விடயத்தை கையில் எடுத்திருக்கின்றன.

ராஜபக்‌ஷர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது முதல், இலங்கையின் எந்த ஆட்சியாளர்களும் செலுத்தாத நெருக்கத்தை, இவர்கள் சீனாவோடு பேணினார்கள். ஒரு கட்டத்தில், நாட்டின் நிதி வருவாயில் சீனாவின் கடன்களே பெரும்பகுதியாக மாறின.

அந்தக் கடன்களும் அதற்கான வட்டிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததே தவிர, உள்நாட்டு வருவாயை அதிகரித்து, கடன்களில் தங்கியிருக்கும் சூழலை மாற்றும் எந்த நடவடிக்கையையும் ராஜபக்‌ஷர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையால், சீனாவின் அசைவுக்கு ஆடும் பொம்மலாட்ட பொம்மைகளாக, ராஜபக்‌ஷர்கள் மாறினார்கள். அதுதான், நாட்டின் பெரும் சொத்துகளை எல்லாம் சீனாவுக்கு விற்க வைத்தது.

அத்தோடு, பிராந்திய நலன், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளை, சீனா மேற்கொள்வதாக இந்தியாவும் அமெரிக்காவும் ராஜபக்‌ஷர்களுக்குத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்த போதிலும், அதைப் புறந்தள்ளி வந்தார்கள்.

இதனால்தான், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்காக, அமெரிக்காவும் இந்தியாவும் பங்காற்றின. அதற்காக, ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான அனைத்துத் தரப்புகளையும் 2012ஆம் ஆண்டு முதல், ஓரணியில் இணைக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தது.

மங்கள சமரவீர தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் குழுவும் சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவும் புலம்பெயர் தமிழர் தரப்புகளும் சிங்கப்பூர், ஜேர்மனி போன்ற நாடுகளில் சந்தித்துப் பேசின. அதுதான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக, பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன வருவதற்குக் காரணமானது.

தற்போதும் அவ்வாறானதொரு கட்டத்திலேயே அமெரிக்காவும் இந்தியாவும் வந்து நிற்கின்றன. அண்மையில், தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில், டெலோவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பும் அதன் ஒரு கட்டமே.

இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கம், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை, முழுமையாக அமல்படுத்துமாறு கோருவதாகும். இதன் பின்னணியில், இந்தியா இருந்தது என்பது, அனைவரும் அறிந்த இரகசியம் ஆகும். அந்தச் சந்திப்பை, தமிழரசுக் கட்சி தவிர்த்த நிலையில், அதில் எப்படியாவது பங்கெடுக்குமாறு வலியுறுத்தி, சம்பந்தனையும் சுமந்திரனையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்திருந்தார்.

அது மாத்திரமல்ல, யாழ்ப்பாணச் சந்திப்புக் குறித்து, மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும், சம்பந்தனைச் சந்தித்து விளக்கமளித்திருந்தனர். வழக்கமாக கூட்டமைப்புக்கு உள்ளேயோ அல்லது, தமிழ்த் தேசிய தரப்புக்களுக்கு இடையிலேயோ இடம்பெறும் இழுபறிகளுக்குள், மனோ கணேசன் தலையீடுகளைச் செய்தாலும், ஹக்கீம் எந்தவித தலையீடுகளையும் செய்வதில்லை.

அது, இன ரீதியான பிணக்குகளை வளர்த்துவிடும் என்பது அவரது நிலைப்பாடு. அப்படியான நிலையில், டெலோவின் சந்திப்புக்கான அழைப்பை, தமிழரசுக் கட்சி புறக்கணித்தது என்ற விடயம் மேலெழுந்த நிலையிலும், அந்தச் சந்திப்பில் ஹக்கீம் கலந்து கொண்டதும், அது தொடர்பில் சம்பந்தனுக்கு விளக்கமளித்ததும், அரசியல் கட்சிகளுக்கு அப்பாலான இராஜதந்திர நகர்வுகள் இருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டின.

ராஜபக்‌ஷர்கள், தென்இலங்கையில் பெரும் விமர்சனங்களை இன்று சந்தித்து நிற்கிறார்கள். ஆனாலும், ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சிப் புள்ளியைப் பிடித்துக் கொண்டு, மேலேழுவதற்கான ஆளுமையை எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கவில்லை.

குறிப்பாக, சஜித் தலைமையிலான அணி மீதான நம்பிக்கை, தென் இலங்கையில் எழவில்லை. அதனால், ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தி, தங்களுக்கு இணக்கமானவர்களை ஆட்சியில் அமர்த்துவது, இலகுவான காரியமல்ல என்கிற நிலையில்தான், ராஜபக்‌ஷர்களைத் தங்களோடு இணக்கமான நிலையைக் கொண்டுவருவதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் முயற்சிக்கின்றன.

அதனால்தான், 13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தையும் புதிய அரசியலமைப்பு விவகாரத்தையும் இந்தியாவும் அமெரிக்காவும் கையில் எடுத்திருக்கின்றன. சிறுபான்மைக் கட்சிகளை ஓரணியில் திரட்டி வைத்துக் கொண்டு, அதிகாரப்பகிர்வு என்கிற விடயத்தை மேல் கொண்டுவர முயல்கின்றன.

அதிகாரப்பகிர்வையோ அதன் போக்கில் வரும் சமஷ்டிக் கோரிக்கைகளையோ, தென் இலங்கை தனி நாட்டுக்கான விடயமாகவே கருதி வந்திருக்கின்றது. அதனால், அதிகாரப் பகிர்வு விடயத்தை ராஜபக்‌ஷர்கள் மீது அழுத்துவதன் மூலம், தங்களுடன் இணக்கமாக, ராஜபக்‌ஷர்கள் வருவார்கள் என்று அமெரிக்காவும் இந்தியாவும் எண்ணுகின்றன. அதற்கான கருவிகளாகவே, தமிழ்க் கட்சிகள் கையாளப்படுகின்றன.இதுதான் தவிர்க்க முடியாத உண்மை.

ஆனாலும், அமெரிக்காவும் இந்தியாவும் ராஜபக்‌ஷர்களைக் கையாள எத்தனிக்கின்ற இன்றைய நிலையில், அதற்குள் எவ்வளவு காரிய சித்திகளை, நாம் அடைந்து கொள்ளலாம் என்று, தமிழ்க் கட்சிகளும் தரப்புகளும் சிந்திப்பதுதான் முக்கியமானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*