;
Athirady Tamil News

யாழ்ப்பாண மருத்துவ பீட மாணவர்களுக்கு பேருந்து: பாடகர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட ஏற்பாடு

0

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர்
மகேந்திரன் சங்கீதன்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக
மருத்துவ பீட மாணவர்கள் கற்றல் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள போதனா வைத்தியசாலை மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக பேருந்து ஒன்று தேவை என்ற அடிப்படையில் அதனை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதியை திரட்டுவதற்காக இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அனுமதிச் சீட்டு, நன்கொடை மற்றும் அனுசரணை மூலமும் நிதி திரட்டப்படவுள்ளது.

25 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் இசை நிகழ்ச்சிக்கு அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும் மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும்.

குறித்த இசை நிகழ்ச்சிக்கு முன் தினம் 18ம் திகதி மாலை ஆறு மணிக்கு பாடகர் ஶ்ரீநிவாசுடன் கலந்துரையாடலுக்கும்
இராப்போசன விருந்து உண்பதற்கான சந்தர்ப்பத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் ஒழுங்குப்படுத்தி இருக்கிறோம். குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கும் 5 ஆயிரம் ரூபாய் அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.

அனைத்திலும் கிடைக்கும் வருமானமும் பேருந்து வாங்குவதற்காகவே செலவிடப்படும்.
சமூகத்தில் உள்ள அனைவரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம் – என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.