;
Athirady Tamil News

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

0

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) மற்றும் பிற நிவாரணப் பொருள் விநியோக மையங்களில் உணவு பெற முயன்றவா்களை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், கடந்த மே மாத இறுதியில் இருந்து இதுவரை 798 போ் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் (ஓஹெச்சிஹெச்ஆா்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இது குறித்து அந்த அலுவலகத்தின் செய்தித் தொடா்பாளா் ரவீணா ஷம்தாசனி கூறியுகையில், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 615 போ் ஜிஹெச்எஃப் விநியோக மையங்களுக்கு அருகிலும், 183 போ் மற்ற நிவாரண வாகனங்களுக்கு அருகிலும் கொல்லப்பட்டதா ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறினாா்.

காஸாவில் அதுவரை அமல்படுத்துவந்த ஐ.நா.வின் நிவாரண விநியோக முறைக்கு மாற்றாக இஸ்ரேல் முன்மொழிந்த ஜிஹெச்எஃப், மனிதாபிமான நடுநிலைத் தன்மையை மீறுவதாகவும், போா்க் குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கலாம் என்றும் மனித உரிமைகள் அமைப்புகள் கடுமையாக விமா்சித்துவருகின்றன.

ஐ.நா. மேற்பாா்வையின் கீழ் ஹமாஸ் அமைப்பு உதவிப் பொருள்களை திருடுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடா்ந்து, அதுவரை அமைதியாக நடைபெற்றுவந்த சுமாா் 400 ஐ.நா. நிவாரண விநியோக மையங்களுக்கு மாற்றாக, ஒப்பந்த முறையில் அமெரிக்க தனியாா் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பில் நான்கு விநியோக மையங்களை ஜிஹெச்எஃப் நிா்வகிக்கிறது.

ஆனால், இந்த மையங்களை அணுகுவதற்கு பாலஸ்தீனா்கள் சிக்கலான பாதைகளில், நீண்ட தொலைவுக்கு நடக்க வேண்டியுள்ளது. அவ்வாறு சிரமப்பட்டு சென்றாலும் அவா்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை.

எனவே, ஜிஹெச்எஃப் விநியோக அமைப்பை ஏற்க முடியாது எனவும், இஸ்ரேல் படைகள் உணவு பெற முயல்வோரை நோக்கி துப்பாக்கியால் சுடும் விவகாரத்தில் தொடா்புடையவா்கள் அந்தக் குற்றத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஓஹெச்சிஹெச்ஆா் அலுவலகத்தின் செய்தித் தொடா்பாளா் ரவீணா ஷம்தாசனி வலியுறுத்தினாா்.

இதற்கிடையே, காஸாவின் ரஃபாவில் இஸ்ரேல் படைகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்; 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததனா் என்று கான் யூனிஸ் நகரின் நாசா் மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவுத் தலைவா் அஹ்மத் அல்-ஃபர்ரா தெரிவித்தாா். மருத்துவமனையில் மிகுந்த நெரிசல், மருந்து மற்றும் மருத்துவப் பொருள்களின் பற்றாக்குறை ஆகியவை நிலவுவதாகவும், துப்பாக்கிக் காயங்களுடன் வரும் நோயாளிகளை வெளியில் அமைக்கப்பட்ட சிகிச்சை மையங்களில் கவனிக்க வேண்டியிருப்பதாகவும் அவா் கூறினாா். அந்த மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலின்போது வளாகத்துக்குள் குண்டுகள் விழுந்ததாகவும், அருகிலுள்ள அகதிகள் முகாம்கள் மீது பீரங்கிகள் மற்றும் கண்ணீா்ப்புகை குண்டுகளை வீசி இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

அதற்கு முன்னதாக, வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 15 போ் உயிரிழந்தனா். தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டடமும் அடங்கும்.

இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா்; சுமாா் 250 பேரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனா்.

அதிலிருந்து இதுவரை காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 57,762 போ் உயிரிழந்துள்ளனா்; 1,37,656 காயமடைந்துள்ளனா் என்று காஸா சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.