;
Athirady Tamil News

‘இன்று போல் நாளையில்லை’!! (கட்டுரை)

0

நாட்டில், ‘இன்று போல் நாளையில்லை’ என்பதால், நள்ளிரவில் எந்தப்பொருளுக்கு விலையேறும் என்று தெரிந்து கொள்வதிலேலேயே மக்கள் அக்கறை கொள்ளவேண்டிய நிலைமை உருவாகிவிட்டது.

தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டால் எதற்கும் விலையை ஏற்றிவிடலாம் என்ற நிலை, கடந்த சில மாதங்கள் நிலவிய பால்மா தட்டுப்பாட்டினால் உருவானது. இது ஏனைய பொருள்களுக்கும் தொடர்கிறது. கறுப்புச் சந்தை நிலைமையிலேயே பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கேட்கின்ற பொருளுக்கு வியாபாரி தீர்மானிப்பதே விலையாக இருக்கிறது. அந்தவிலைக்குப் பொருளைப் பெற நாம் தயாரில்லையென்றால், பொருளில்லை. தட்டுப்பாடும் விலை அதிகரிப்புமே வாழ்வாதாரத்தின் நிரந்தரமாகிவிட்டன.

அரசாங்கம், எங்களை அசைக்க முடியாது என்று மார் தட்டிக் கொள்வதற்கு முடியாவிட்டாலும் எல்லாச் சுமைகளும் அவர்கள் மீதே இருந்து கொண்டிருக்கிறது என்பதனை அவர்கள் தட்டிக்கழித்துவிட முடியாது. ஆனால் கொவிட் நிலைமை, உலகளவில் ஏற்பட்ட நிதி சார் நெருக்கடிகளுக்கப்பால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குட்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதே உண்மை.

இதற்குள் மக்கள் சிக்குண்டு படும் இன்னல்களுக்கு அளவில்லை என்றே கூறமுடியும். வர்த்தகர்களும் பெருமுதலாளிகளும் மாத்திரமே நாட்டில் வாழுகின்றார்களா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று சிறிது காலத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் நிலையில் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள், நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்குவதாக வெளிவந்த அறிவிப்பினையடுத்து மக்கள் ஜனாதிபதி மீது வாழ்த்துகளைச் சொரிந்தனர்.

ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட நிவாரணங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து விளக்கும் சுற்றுநிருபமொன்றை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர வெளியிட்டார். புதிய கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிக்கும் முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டம் நிறைவுற்றதாக அறிவிக்கும் வரை இந்த நிவாரணங்கள் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என்றும் அறிவித்திருந்தார்.

ஆனால், அந்த அறிவிப்பு ஒரு சில மாதங்களிலேயே நின்று போனது. கொவிட் தொற்றுக்குள்ளாகின்றவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கப்பட்ட நிவாரணப் பொதியும் நின்று போனது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு பொருளுக்கும் விலையேற்றம் நடைபெற ஆரம்பித்தது. அந்த ஆரம்பம் முதலாளிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் ஆரோக்கியமானதாக இருந்தது என்றுதான் சொல்லிக் கொள்ள வேண்டும்.

எரிபொருளுக்கான விலையேற்றமானது அனைத்து பொருட்களுக்குமான விலையேற்றத்தினை அங்கிகரிப்பதற்குச் சமமானது. அந்தவகையில் ஒவ்வொரு பொருளாக விலையை ஏற்றிக் கொண்டன. கடந்த வருடத்தில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்ட மஞ்சள், உழுந்து போன்றவைகளுக்கும் கடலை, கௌப்பி, பயறு போன்ற தானியங்களுக்கும் ஏற்பட்ட விலையேற்றம் மிகப்பாதகமானதாகவே இருக்கிறது. அது பதுக்கல்களுக்கும் கடத்தல்களுக்கும், சட்டவிரோதமான விற்பனைக்கும் அடிகோலியது. அதனால் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வரும் தொன்கணக்கான மஞ்சள் எரித்து அழிக்கப்பட்டு வருகிறது.

எது எப்படியானாலும், எப்படியோ மக்களை போசனையற்ற, சக்தியற்றவர்களாக்கும் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். போசணை உடைய நாட்டு மக்களை கொண்டிருக்க வேண்டிய அரசாங்கம் உணவுச் சுருக்கத்துக்கான வழியை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது.

நியூயோர்க்குக்கும், ஸ்கொட்லாந்துக்கும் சென்றிருந்த ஜனாதிபதி நாட்டின் பெருமைகளைப் பெருமையாகச் சொல்லி வந்தார். அந்தப் பெருமையின் பூரிப்பில் மக்களுக்கு விலையேற்றம் என்ற பரிசே வழங்கப்படுகிறது. நியூயோக்கிலிருந்து நாடு திரும்பியதும் அரிசியின் விலையைப் பார்த்துக் கொள்ளவா ஜனாதிபதியாக்கினீர்கள் என்று கேட்டது போன்று ஸ்கொட்லாந்திலிருந்து திரும்பி பொருள்களின் விலைக்கட்டுப்பாடா எனது வேலை என்று கூடக் கேட்க வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால், அத்தியாவசியப் பொருள்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. இதன் மூலம் யாரும் எந்த விலையிலும் பொருள்களை விற்கலாம் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. விவசாய நடவடிக்கைகளுக்கன இரசாயன உரம், கிருமிநாசினிகளின் இறக்குமதி நிறுத்தப்பட்டதனால் இம்முறை விவசாய நடவடிக்கை அதள பாதாளத்துக்குச் செல்லவிருக்கிறது. இதன் பாதிப்புக்களைத் தடுப்பதற்கு அரசாங்கத்திடம் எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை இருந்தாலும் நாட்டின் இயற்கை விவசாயம் தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பேசுகின்றனர்.

அத்தியாவசியம் அநாவசியமாகிவிட்டது. அத்தியாவசியப் பொருள்கள் என்று எதுவுமில்லை. அதன் விலைகள் அரசாங்கத்தின் கையிலோ கட்டுப்பாட்டிலோ இல்லையென்றால் சாதாரண அடிமட்ட மக்களும், ஏழை மக்களும், அரச தொழில்களை நம்பி வாழும் மக்களும் உணவுக்கு என்ன செய்வது என்பது இப்போதைய மிகப்பெரும் கேள்வி.

இந்த இடத்தில்தான் நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கலான நெருக்கடிக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. இது வெறுமனே உலக சந்தையில் உருவான விலையேற்றத்தின் பலன் என்று ஒரு சொல்லில் சொல்லிவிட்டு நாம் மௌனமாகிவிடமுடியாது. நாட்டில் பொருள்களின் விலையேற்றம் பணத்தின் பெறுமதிக் குறைவு, பொருளாதார வளர்ச்சி போன்றவை மத்தியவங்கியினால் கட்டுப்படுத்தப்படவில்லை. கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் பல நிதியியல் ரீதியான நெருக்கடிகள் உருவாகிக கொண்டிருந்த நிலையில் மத்திய வங்கியின் ஆளுனர் பதவி விலகி புதிய ஆளுனராக முன்னை ஆளுனரும் இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனத்தின் பின் நாட்டில் நிதிவளம் அதிகரிக்கும் மக்களின் நிதிப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு புதிய நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்ததே தவிர வேறு பயன் ஒன்றுமில்லை.

நாட்டில் ஆட்சியிலிருக்கும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கூட்டணி கலைந்துவிடுமோ என்று எல்லோரும் அச்சப்படுமளவிற்குப் பிரச்சினைகள் வலுப்பெற்றுவிட்டன. ஆனால் தமக்குள்ளும் தமது கூட்டணிக்குள்ளும் எந்தப்பிரச்சினையும் இல்லையென வெளிப்பூச்சில் சொல்லிக்கொள்கிறார்கள். எதிர்க்கட்சியினர் நாட்டை நடத்த முடியாவிட்டால் வெளியேறுங்கள் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். இவையெல்லாம் நாட்டின் நன்மைக்காகவா என்று நம் போன்ற மக்கள் கேட்க மாத்திரமே முடிகிறது.

பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ, சுவர்களில் ஓவியங்களை வரைந்து அரசியலினால் நாட்டை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று கூறிய இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வரிசையில் நிற்கின்றனரா என்பதை கண்டறிந்து அவர்களை மீண்டும் இந்நாட்டிற்கு கொண்டுவரக்கூடிய அரசியலில் ஈடுபடுவதே பொதுஜன பெரமுனவிற்குள்ள வரலாற்று எதிர்கால பணியாகும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலைமை ஏன் உருவானது என்பது அவருக்கும் அரசாங்கத்திற்கும் தெரிந்திருந்தாலும் ஏன் அவ்வாறான கருத்தை அவர் வெளியிடவேண்டிய நிலை உருவாகிறது என்பதுதான் கேள்வி. உண்மையில் விலையேற்றங்களால் வாழ்க்கை மீது ஏற்பட்டிருக்கும் சுமையே அவர்களை நாட்டைவிட்டு வெளியேறத் தூண்டுகிறது.
மக்களுக்காக அரசியலே தவிர அரசியலுக்காக மக்களல்ல. ஆனால் நமது நாட்டினைப் பொறுத்தவரையில் பௌத்த ஆதிக்கம், சிறுபான்மை மக்களை அடக்குதல், அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள், கைதுகள், சட்ட நடவடிக்கைகள் என நெருக்கி சிங்கள மக்களை ஒரு பெரும்பான்மை இனவெறிச் சிந்தனையில் வைத்துக் கொண்டு அரசியலுக்காக மக்கள் என்று ஒருபுறம் பிரமிப்புக் காண்பிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் அரசியலை ஆரம்பித்த மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாக இருந்த தன்னுடைய அதிகார வீழ்ச்சியை தூக்கி நிறுத்திக் கொள்வதற்காக பொதுஜன பெரமுன என்ற ஒரு கட்சியை அமைத்து அதன் ஐந்து வருடத்தினை நிறைவு செய்திருக்கிறார். இப்போது நாட்டில் அரசாங்கமும் ஜனாதிபதியும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்ற போதும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாதிருக்கிறது. ஜனாதிபதி ஒரு புறமும் பிரதமர் ஒருபுறமும் இருக்கின்ற ஆட்சிகளுக்கான வரலாறுகள் இலங்கையில் பல இருந்தாலும் அதற்கு, சந்திரிகா – ரணில், மைத்திரிபால – ரணில் ஆட்சிகள் சிறப்பான உதாரணங்களாகும். ஆனால் இப்போதிருக்கின்ற ஆட்சி அதனைவிடவும் பிரச்சினையானதா என்று மக்களிடம் சிந்தனை ஏற்பட காரணமாக இருக்கிறது.

உலகின் கொவிட் பரவல் சிக்கலுக்குள் இருந்தாலும் நாட்டில் ஒரு பலமான எதிர்கட்சி இன்மை இந்த இடத்தில் பெரும் குறைபாடாகவே இருக்கிறது. ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் போன்ற விடயங்களால் மக்களிடம் உருவான எதிர்ப்பலை காரணமாக ஏற்பட்ட ஆட்சிமாற்றமானது நாட்டில் ஒரு பலமான எதிர் அணியை இல்லாமலாக்கிக் கொண்டது.

எதிரணியில்லாமை, மக்களின் தம் வாழ்க்கை மீதான நம்பிக்கையின்மை, மக்களின் எழுச்சியின்மை போன்றவைகளுக்குள் நம் நாட்டின் எதிர்காலம் அரசியலாகவே இருக்கப்போகிறதா என்பதைக்காணப் பொறுத்திருப்போம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 3 =

*