;
Athirady Tamil News

வடக்கின் மீதான சீனாவின் ‘புதிய காதல்’ !! (கட்டுரை)

0

இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர், கடந்த வாரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என இலங்கையின் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் அடையாள விஜயமாக, நல்லூர்க் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது அமைந்துவிடுகின்றது. அதேபோல், சீனநாட்டின் தூதுவரும் மேலாடை களைந்து வேட்டி கட்டி, கந்தன் தரிசனம் பெற்று, கோவில் வாசலில் எடுத்த புகைப்படங்கள் வௌியாகியிருந்தன.

வௌிநாட்டுத் தூதுவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்வதொன்றும் புதிய விடயமல்ல! ஆகவே, சீன நாட்டின் தூதுவரின் வடக்குக்கான விஜயம் பற்றி, தனித்துக் குறிப்பிட வேண்டியது ஏன் என்ற கேள்வி எழலாம்.

மேற்குலகின் தூதுவர்கள் அவ்வப்போது வடக்குக்கும் கிழக்குக்கும் விஜயம் செய்வது சாதாரணமான விடயம்தான். யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராலயம் ஒன்றையே கொண்டிருக்கிறது. இதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

மேற்குலகின் இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரலில், தமிழர் விவாகாரம் முக்கியத்துவம் மிக்கதொன்று. அதிலும், அந்த நாடுகளின் குடிமக்களாக இருக்கும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் கொடுக்கும் அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருக்கிறது.

இந்தியாவுக்கோ, இலங்கையின் வடக்கு என்பது, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அவசியமான பூகோள தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க பகுதி. அது மட்டுமல்லாது, இன்றைய பொருளாதார சிக்கல் நிலை, இலங்கைக்கு ஏற்படும் வரை, இலங்கையில் இந்தியா தலையீடு செய்வதற்கும், அழுத்தம் கொடுப்பதற்கும் பிரதான துருப்புச் சீட்டாக இருந்ததும் இலங்கையின் இனப்பிரச்சினைதான்.

ஆனால், இதுவரைகாலமும் வடக்கு மீதோ, வடக்கு-கிழக்கு மீதோ, சீனா தனித்த அக்கறையொன்றை வௌிக்காட்டியதில்லை. இலங்கையின் இனப்பிரச்சினையை, இலங்கையின் உள்விவகாரம் என்ற அடிப்படையில்தான் சீனா அணுகியிருந்தது; அணுகிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் வடக்கின் மீது ஏன் இந்தத் திடீர்க்காதல்?

அண்மைக் கால செய்திகளில் வௌிவந்த ஒரு விடயம், இங்கு குறிப்பிடத்தக்கது. வடக்கின் சில தீவுகளில், சீனா முன்னெடுக்கவிருந்த சூரியசக்தியிலான மின்பிறப்பாக்கத் திட்டங்கள், ‘மூன்றாம் தரப்பின்’ பாதுகாப்பு தொடர்பான அச்சம் ஏற்படுத்திய அழுத்தத்தின் விளைவாகக் கைவிடப்பட்டு, அந்தத் திட்டங்கள் மாலைதீவுக்குச் சென்றதாகச் செய்திக் குறிப்புகள் தெரிவித்தன.

இங்கு, அழுத்தம் கொடுத்திருக்கும் அந்த ‘மூன்றாம் தரப்பு’ இந்தியாதான் என்று ஊகிப்பது, அவ்வளவு கடினமானதொன்றல்ல. இலங்கையில் சீனா கால்பதிப்பதே, இந்திய தேசிய பாதுகாப்புக்குப் பெரும் சவாலானதொன்றாக இருக்கும் போது, இலங்கையின் வடக்கில், சீனா கால் பதிப்பது, இந்திய தேசிய பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தலாகவே அமையும். ஆகவே, இந்தியா எப்பாடுபட்டேனும் அதைத் தடுக்கவே முயலும். இம்முறை, இந்தியாவின் முயற்சி வெற்றியே! இந்த விடயம்தான், சீனாவின் வடக்கின் மீதான திடீர்க் காதலுக்கான வினையூக்கி எனலாம்.

‘இராஜதந்திரம்’ என்ற விடயம், கால ஓட்டத்தில் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. பல புதிய தந்திரோபாயங்கள், இராஜதந்திர அடைவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக இராஜதந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான், ‘மக்களுக்கான இராஜதந்திரம்’ (People to people Diplomacy (P2P Diplomacy)), நவீன இராஜதந்திர உபாயங்களில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.

மக்களுக்கான இராஜதந்திரம் என்பது, சீன மக்கள் குடியரசின் (PRC) இராஜதந்திர முன்னெடுப்புகளின் கீழ், சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) முன்னெடுக்கும் ஒரு தந்திரோபாயமாகும். இது மக்களிடையே நட்பை மேம்படுத்துவதையும் நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்காக, சீன மக்கள் வெளிவிவகார நிறுவனம் (CPIFA), என்ற நிறுவனம் மக்களுக்கான இராஜதந்திரத்துக்காகவே அர்ப்பணிப்புடன் இயங்குகிறது. சீனாவின் முன்னாள் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஸூ என்லாய் – இன் முன்மொழிவின் பிரகாரம் உருவான இந்நிறுவனத்தின், கௌரவத் தலைவராகவும் அவரே பணியாற்றியிருந்தமை, இந்த நிறுவனத்தினதும் மக்களுக்கான இராஜதந்திரத்துக்கு சீனா கொடுக்கும் முக்கியத்துவத்தினதும் வலிமையைக் கோடிட்டுக்காட்டி நிற்கிறது.

சீன இராஜதந்திரத்தின் முக்கிய தந்திரோபாயம், மக்களுக்கான இராஜதந்திரம். இன்றைய இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஸென்ஹொங், இந்தப் பதவியில் அமர்த்தப்பட முன்பு, சர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தின் தலைவராகக் கடமையாற்றியவர். ஆகவே, சீனாவின் இராஜதந்திர சித்தாந்தங்கள் பற்றிய பிரக்ஞை அவரிடம் பலமாகவே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால், இதுவரை காலமும் சீனா பெரிதாகவோ, விசேடமாகவோ கண்டுகொள்ளாத இலங்கை தமிழ் மக்களிடம், இன்றைய நிலையில் மக்களுக்கான இராஜதந்திரத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை சீனாவுக்கு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

மிக வௌிப்படையான ஊகம் யாதெனில், இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்‌ஷ இருந்தபோது, இலங்கை மீது சீனா கொண்டிருந்த செல்வாக்கு, கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருக்கின்றபோது சீனாவிடம் இல்லை.

மாறாக, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. அது, சீனா முன்னெடுக்கவிருந்த திட்டங்களை, இந்தியாவின் அழுத்தம் நிறுத்தும் அளவுக்கு இருப்பது, சீனாவுக்கு அவ்வளவு உவப்பானதொரு செய்தியல்ல.

இந்த நிலையில்தான், தன்னுடைய இராஜதந்திர உபாயத்தைக் கொஞ்சம் சீனா மாற்றிப் பார்க்க விளைகிறது. இதன் மூலம், இலங்கை அரசாங்கத்துக்கும் அது ஒருவகையான அழுத்தத்தைப் பிரயோகிக்க எண்ணுவதாகவே தெரிகிறது.

தமிழர் பிரதேசங்களில் இந்தியாவுக்கு உள்ளதைப்போன்ற இராஜதந்திர உட்கட்டமைப்புகள், வடக்கை எட்டிப்பார்த்துள்ள சீனாவுக்குக் கிடையாது. இலங்கையின் பிரதான தமிழ்க் கட்சிகளைத் தன்னுடைய சட்டைப் பைக்குள் வைத்திருப்பதுதான், இந்தியாவின் பலமாகும். இந்தியா இன்றி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஓர் அணுவேனும் அசையாது. அப்படி அசைய முயற்சித்தவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நீண்ட நாள்கள் நீடிப்பதில்லை.

ஆனால், தமிழ்க் கட்சிகளுக்கும் சீனாவுக்கும் எந்த உறவுகளும் கிடையாது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு எந்தவொரு தமிழ்க் கட்சியும் அழைக்கப்படவில்லை.

சீனா, தற்போது தமிழ்க் கட்சிகளுடனான நெருங்கிய உறவை ஸ்தாபிக்க விரும்பினாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அதைச் செய்வது சாத்தியமில்லை. பெயரளவு சந்திப்புகள் நடத்தப்படலாம். ஆனால், இந்தியாவை மீறி, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் செல்வாக்கை ஏற்படுத்துவது தற்போதைய சூழலில் இயலாத காரியமாகும்.

மறுபுறத்தில், வடக்கில் இயங்கும் தேசிய கட்சிகள், ஒட்டுக் குழுக்களோடு சீனா இயங்கலாம். ஆனால், அது சீனா விரும்பும் அளவுக்கான செல்வாக்கை வடக்கிலும் கிழக்கிலும் சீனாவுக்கு வழங்காது. அப்படியானால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான தீவிர தமிழ்த் தேசியவாத சக்தியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன், சீனா நெருங்கிய உறவை ஏற்படுத்தலாமே என்று கேட்கலாம்.

தமது சொல்பேச்சைக் கேட்பதில்லை என்பதுதான், இந்தியாவுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான உறவு விரிசலடையக் காரணமாகும். ஆகவே, கஜேந்திரகுமாரிடம் எவ்வளவு தூரம், சீனா செல்வாக்கு செலுத்த முடியும் என்பது ஐயத்துக்கு உரியதாகும். மேலும், சீனா சர்வ நிச்சயமாக, இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிடாது. அது, சீனாவின் சர்வதேசக் கொள்கைக்கு உவப்பான ஒன்றல்ல.

எது எப்படியிருப்பினும், வடக்கின் மீது சீனா காட்டத்தொடங்கி இருக்கும் இந்தக் காதலின் பலனை, தமிழ் மக்கள் இறுகப் பற்றிக்கொள்வது அவசியமாகும். வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. வடக்கு-கிழக்கின் பொருளாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும், மேம்பாட்டுக்கும் சீனாவால் கணிசமான உதவிகளை வழங்க முடியும். ஆகவே அந்தப் பலனை, தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்தப் பலனை, வடக்கு-கிழக்குக்குப் பெற்றுக்கொடுக்க ஏலவே அங்கிருக்கின்ற அரசியல் சக்திகளால் முடியாதபோது, அதற்காக புதியதோர் அரசியல் சக்தி உருவாதல் அவசியமாகிறது. அத்தகைய சக்தியொன்றை அடையாளம் கண்டு, சீனா தன்னுடைய நண்பனாக்கிக்கொண்டால், அந்த நட்பின் பலன் வடக்கு-கிழக்குக்குக் கிடைக்கும்.

சீன-இந்தியப் போட்டியில் வெறும் பகடைக்காயாக வடக்கு இருந்துவிடக்கூடாது. அந்தப் போட்டியின் விளைவாக, உச்ச பயனை அடையும் ஸ்தலமாக அது மாறவேண்டும். அதுதான் வடக்கு-கிழக்கு தமிழ் அரசியலின் வெற்றியாக அமையும்.

சரணாகதி புகும் அரசியலைக் கைவிட்டு, நாம் உய்வுறும் வகையிலான தந்திரோபாய அரசியலை முன்னெடுக்க வேண்டும். ‘நெல்லை யார் குற்றினாலும் எமக்குத் தேவையானது அரிசி’ என்ற சிந்தனைத் தெளிவுடன், உணர்ச்சிவசப்பட்ட அரசியலைத் தாண்டி, தமிழ் அரசியல் சிந்திக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.