;
Athirady Tamil News

தமிழர் பூமியையும் விழுங்கப் பார்க்கும் சீனா !! (கட்டுரை)

0

மத பேதங்கள் அனைத்தையும் கடந்து, வந்தோரை வரவேற்று, உபசரித்து அனுப்பும் பண்பாடு தமிழர்களுக்குரியது. அந்நியர்களையும் உபசரிப்பதில் தமிழர்கள் முதன்மையானவர்கள் என்றே சொல்லாம்.

உபசரிப்பைப் பொறுத்த வரையில், வீட்டுக்கு வந்து விருந்துண்டவர்களின் இலையையோ அல்லது தட்டையோ எடுக்கவிடாது, நீரை ஊற்றி அவர்களின் கைகளைக் கழுவ வைத்து இன்முகத்துடன் வழியனுப்பி வைப்பது தமிழரின் வழமை. அவர்களின் உபசாரமும் இன்சொற்களும் வந்தோருக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று“ என்ற குறளின் மூலம், நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவதில்லை என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வாழ்க்கை வறுமைப்பட்டாலும், சில அந்நியர்களை உபசரிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது காலத்தின் தேவையாக உள்ளது. உதாரணமாக“வெட்டுக்கிளிக் கூட்டம் கடந்துபோன காடும், காளகேயர் கூட்டம் கடந்துபோன நாடும் சுடுகாடாகிவிடும்“ என்று பாகுபலி திரைப்படத்தின் முதலாம் பாகத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும்.

அதைப்போலவே, சீனா என்ற நாடு கால் பதிக்கும் நாடுகள் உருப்பட்டதாக சரித்திரமே கிடையாது. 40க்கும் மேற்பட்ட நாடுகளை கடன்பொறிக்குள் சிக்க வைத்து ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது சீனா.

கடந்த டிசெம்பர் 15ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சீனத் தூதுவர் குய் சென் ஹாங், தனது விஜயத்தின் போது அங்குள்ள தமிழ் மக்கள், அன்புடனும், விருந்தோம்பல் பண்புடனும் இருந்ததைக் கண்டதாகவும் அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கிழக்கிலுள்ள மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து தமக்கு அதிகளவான கோரிக்கைகள் வந்ததையடுத்தே, அடுத்த மாதம் அங்கு பயணம் செய்யவுள்ளதாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை தெற்கில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அமைக்க கடன்வழங்கி, அதை 99 வருடங்கள் என்ற நீண்ட கால குத்ததைக்குப் பெற்றுக்கொண்டுள்ள சீனா, மேற்கில் தற்போது கொழும்பு துறைமுக நகரத்தை அமைக்க நிதி வழங்கியிருக்கிறது.

இலங்கையின் தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் தடம் பதித்த சீனாவின் பார்வை, அண்மையில் வடக்கிலும், தற்போது கிழக்கிலும் விழுந்துள்ளது.

வடக்கு விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறைக்கு விஜயம் செய்த சீன தூதுவர், அங்கிருந்து “இந்தியாவுக்கு எவ்வளவு தூரம்?“ என்று வினவியதற்கு 30 கிலோ மீற்றர் என, இராணுவ வீரரொருவர் பதிலளித்ததையடுத்து, அவ்விடத்தில் இருந்தவாறே ட்ரோன் கமெரா ஒன்றின் மூலம் அந்தப் பகுதியைக் கண்காணித்திருந்தார்.

அதனையடுத்து, மன்னார் மாவட்டத்துக்குச் சென்ற அவர், கடற்படைக்கு சொந்தமான படகில் பாக்கு நீரிணைக்குள் 17 கடல் மைல்கள் தூரம் பயணம் செய்து, இராமர் பாலம் என்று அழைக்கப்படும் மணல் திட்டுக்களில் மூன்றாவது மணல் திட்டை பார்வையிட்டிருந்தார். இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் அந்த மணல் திட்டுக்கும் இடையிலானது சொற்ப தூரமே என்பது குறிப்பிடத்தக்கது.

1 பில்லியன் ரூபாய் பெறுமதியான காற்றாலை மின்திட்டம் குறித்து ஆய்வுசெய்ய இந்தியாவின் முதன்மைச் செல்வந்தரான அதானி, மன்னாருக்கு விஜயம் செய்த குறுகிய காலத்துக்குள்ளேயே சீனத்தூதுவரின் பயணமும் இடம்பெற்றிருந்தது.

அதுமட்டுமின்றி யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகளை வழங்கியிருந்தது சீனா. கடற்றொழில் பிரச்சினைகளால் இந்திய மீனவர்களுக்கு எதிரான மனநிலையில் இலங்கை மீனவர்கள் இருக்கும் சந்தர்ப்பத்தில், “இந்தியா எந்த உதவியையும் வழங்கவில்லை, ஆனால் சீனா வழங்கியுள்ளது“ என, வடக்கு மீனவர்களை மாய வலையில் விழ வைப்பதற்கான முயற்சியையே சீனா அங்கு செய்தது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கும் பாரம்பரிய முறையில் வழிபாட்டுக்குச் சென்றிருந்த அவர், “இது வெறும் ஆரம்பம் தான்“ என்று மன்னார் கடல் விஜயத்தின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்து தனது சொகுசு ஜீப்பில் ஏறிச் சென்றார்.

தற்போது, தமிழர்களின் விருந்தோம்பல் மற்றும் பண்பாடு குறித்து பாசாங்கு வார்த்தைகளைப் பேசி, கிழக்கு மாகாணத்துக்குள் நுழைவதற்கு வலைவிரிக்கிறது சீனா. மக்கள் மற்றும் அமைப்புகள் பலவற்றின் அழைப்புக்கு அமையவே அங்கு செல்லவுள்ளதாக சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது வெறும் அழைப்பினால் செய்யும் அன்பு விஜயம் இல்லை என்பதும் அடுத்த கட்டத்துக்காக இடங்களை வேவு பார்த்து மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை எடுத்து, இடங்களைக் கைப்பற்றும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனெனில், வடக்கு விஜயத்தின் போது, இந்தியாவும் சீனாவும் நல்ல நண்பர்கள் என்று ஊடகங்களிடம் தூதுவர் தெரிவித்த போதும், இந்தியாவின் நடவடிக்கைகளையும் இந்தியாவை நோக்கியும் சீனாவின் குறி இருந்ததை கண்கூடாகக் காண முடிந்தது. .

இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள யாழ். மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு விஜயம் செய்த சீனத் தூதுவர், வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஏனைய மாவட்டங்களுக்கு ஏன் விஜயம் செய்யவில்லை என்ற சந்தேகம் அனைத்து தரப்புகள் மத்தியிலும் எழுந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கிழக்கைப் பொறுத்தவரை, கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் திருகோணமலை எண்ணெய்த் தாங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஏற்கெனவே, ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 14 எண்ணெய்த் தாங்கிளை மேலும் 50 வருடங்களுக்கு அந்த நிறுவனத்துக்கே குத்ததைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட 99 எண்ணெய்த் தாங்கிளில் 24 தாங்கிகள் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 14 தாங்கிகள் ஐ.ஓ.சி நிறுவனத்திடமும் உள்ளன.

வரையறுக்கப்பட்ட திருகோணமலை பெற்றோலிய முனையம் என்ற நிறுவனத்தின் கீழுள்ள ஏனைய 61 தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் வகையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் 51 சதவீத பங்குகள் பெற்றோலியக் கூட்டுத் தாபனத்துக்கும் 49 சதவீதப் பங்குகள் ஐ.ஓ.சி நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிழக்குக்கான சீனாவின் விஜயத்தில் எண்ணைத் தாங்கிப் பண்ணை மற்றும் பிரசித்தி பெற்ற திருகோணமலைத் துறைமுகம் ஆகியவற்றுக்கு சென்று அவதானிப்புகளை சீனா மேற்கொள்ளும் என்பதை உய்த்தறியலாம்.

அதுமட்டுமின்றி, திருகோணமலையின் புல்மோட்டை பகுதியிலுள்ள கனிய மணல் வளம், சம்பூர் புதுப்பிக்கத்தக்க அபிவிருத்தித் திட்டம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், அம்பாறையின் ஒலுவில் பிரதேசத்திலுள்ள துறைமுகம் ஆகியவற்றையும் விசேடமாக இங்கு குறிப்பிட்ட வேண்டும்.

ஏனெனில், சீனத் தூதுவர் விஜயம் செய்யும் இடங்களைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை சற்றேனும் ஊகிக்க முடியும். வருடத்தில் 9 முதல் 10 மாதங்கள் வரை கடும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் பெறும் கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத் தக்க மின்சக்தியை பெற சூரிய கலத் தொகுதியை அமைக்கும் எண்ணமும் சீனாவுக்கு இருக்கலாம்.

பெரிய இடங்கள் அல்லது சிறிய இடங்களுக்கான அபிவிருத்தி என்பதை விட, அங்கு காலூன்றுவதே சீனாவின் நோக்கம் என்பதே நிதர்சனம். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்துக்கு இலங்கை சென்றிருந்தாலும், நட்பு நாடுகளின் கடன் இலங்கைக்கு தேவைப்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

நாணய நிதியத்துக்குச் சென்றமை எதிர்கால இருதரப்புக் கடன்களில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என, மேற்குறிப்பிட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து சீன தூதுவர் எச்சரித்திருந்தார்.

மேலும், எந்த அரசாங்கம் வந்தாலும் இலங்கையுடனான உறவை சீனா பேணும் என்றும் அங்கு அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கையை விட்டுச் செல்வதற்கான எண்ணம் சீனாவுக்கு துளியளவும் இல்லை என்பது இதில் தெளிவாவதுடன், இலங்கையைப் பயமுறுத்தவே எதிர்காலக் கடன் குறித்த கருத்தை சீனா வெளியிட்டுள்ளது.

தமது பெல்ட் அன்ட் ரோட் முன்முயற்சியில் முக்கிய மையமாகத் திகழும் இலங்கையை மேலும் கடன் வழங்கி பொறிக்குள் வைத்திருக்கவே சீனா முயலும் என்பது நிச்சயம்.

இலங்கையின் தெற்கையும் மேற்கையும் அபிவிருத்தி என்ற போர்வையில் கைக்குள் வைத்திருக்கும் சீனா, வடக்குக்குச் சென்று வலை விரித்துவிட்டு வந்துள்ளது. தற்போது கிழக்குக்கும் செல்லவுள்ளது.

இலங்கையின் நாலாப் புறங்களிலும் தனது காலத்தடத்தை பதித்தால் இந்து சமுத்திரத்தின் முக்கிய கேந்திர நிலையத்தில் இருந்துகொண்டு தனக்குத் தேவையானவற்றை சாதித்துக்கொள்ளலாம் என்ற திட்டம் சீனாவுக்கு கட்டாயம் இருக்கும்.

இரையை விழுங்குவதற்குக் காத்திருக்கும் முதலையைப் போல, நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு கடன் தேவைப்படும் தோதான தருணத்தை பார்த்துக்கொண்டிருக்கும் சீனா, நடந்த வடக்கு விஜயத்தையும் நடக்கவுள்ள கிழக்கு விஜயத்தையும் கொண்டு, ஒப்பந்தங்கள் மூலம் வடக்கு, கிழக்கில் தனக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்ளும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.