;
Athirady Tamil News

ஏறுமுகத்தில் ஏறாவூர்: பெண் ஆளுமைகள் அறைகூவல் !! (கட்டுரை)

0

பெண்களுக்கென தனியானதொரு பொதுச் சந்தை, இலங்கையிலேயே ஏறாவூரில்தான் உள்ளது. அதேபோல, பெண்களுக்கென பிரத்தியேக நூலகமும் ஏறாவூரில்தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் மட்டும் நின்று விடவில்லை. பெண்களுக்கென தனியாக நடைப் பயிற்சி, உடற்பயிற்சி ஏற்பாடுகளும் ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதென்று ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் கூறுகின்றார்.

ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் ‘பாத்திமா மகளிர் நூலகம்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான வாசிகசாலைத் திறப்பு விழா ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நகர சபைத் தவிசாளர் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஏறாவூரின் பெண் ஆளுமைகளான பிரதேச செயலாளர் நிஹாறா, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா, பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் சிஹானா, தென்னை பயிர்ச் செய்கை ஆய்வு கூடப் பொறுப்பாளர் ஜாஹிறா, நகர சபை உறுப்பினர் சுலைஹா உட்பட இன்னும் பல பெண் கல்வியாளர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கான நூலகம் என்ற விடயத்துக்கு ஏன் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை, நன்கு அக்கறையுடன் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் கலாநிதி முஹம்மத் மஜீத் மஸ்றூபா.

இவர், தென் கிழக்குப் பல்கலைக் கழக விஞ்ஞான தலைமை நூலகத்தில், இலத்திரனியல் வளங்கள் மற்றும் தகவல் சேவைகள் பிரிவின் சிரேஷ்ட உதவி நூலகராக கடமையாற்றுகிறார்.

கலாநிதி முஹம்மத் மஜீத் மஸ்றூபா

தாய் தனது கருவறையில் சிசுவைச் சுமந்திருக்கும்போதே, வாசிப்புப் பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அதாவது கருவுற்ற தாய், நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் சிசுவின் மூளை விருத்தி சிறப்பாக நடைபெறும் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். எப்படியாவது வாசிப்பை சிறுபராயத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதால், பெண்கள் இந்த விடயத்தில் அக்கறை எடுக்க வேண்டும் என்று கலாநிதி மஸ்றூபா வலியுறுத்துகின்றார்.

கலாநிதி மஸ்றூபா பகிர்ந்துகொண்ட கருத்துகள், அறிவுசார்ந்தவையாகவும் இன்றைய சமூகத்துக்கு மிகவும் அத்தியாவசியமானவையாகவும் பின்வருமாறு அமைந்திருந்தன:
வாசிப்பு என்பது சிந்தித்தல், ஆராய்தல், காரணம் கண்டறிதல், கற்பனை செய்தல் என்பவற்றுடன் நியாயம் கண்டறிதல் போன்றவற்றை உள்ளடக்கும் பல முக்கியமான திறன்கள் கொண்ட செயன்முறையாகும்.

மகிழ்ச்சி, பொழுதுபோக்கு, தகவலறிதல், அறிவைப் பெறல் என்று வாசிப்பின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அது நமது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ஒரு கருவியாகும்.

வாசிப்பதும் அதன் மூலம் அறிவைப் பெற்று வளர்ச்சி அடைவதும், ஒரு குறித்த இனம், சமூகம், இளையோர், முதியோர், ஆண், பெண் ஆகியோருக்குத்தான் என்று வரையறுக்கப்பட்டதல்ல. முன்னைய காலங்களில் பாடசாலைக் கல்வியையும் பல்கலைக்கழக கல்விகளையும் பெண்கள் விரும்பியிருக்கவில்லை. கல்வி எந்த வடிவத்தில் இருந்தாலும், அதனை மனித குலத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால், அதில் பெண்களை மேம்படுத்த வேண்டும்.

மனித குலம் என்பது, உலகில் சரிபாதியான சனத் தொகையைக் கொண்ட பெண்களையும் உள்ளடக்கியதுதான். ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் அறிவு பிரிக்கப்படவில்லை. உலக சவால்களுக்கு முகம் கொடுப்பதில் பெண்களும் தயார்படுத்தப்பட வேண்டும்.

பெண்கள் தற்போது கல்வி அடைவு மட்டத்தில் கோலோச்சுகிறார்கள் என்பது, பெருமைப்பட வேண்டிய விடயம்தான். அதேவேளை அந்த அடைவு பிரயோகத்தில் எந்த முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது என்று பரிசீலனை செய்ய வேண்டும். நாட்டின், குடும்பத்தின் அபிவிருத்திக்காக பெண்களின் அறிவும் ஆற்றலும் ஆளுமையும் பிரயோகப்படுத்தப்பட வேண்டும்; அதற்கு வாய்ப்பளிக்கவும் வேண்டும்.

இதற்கெல்லாம் அறிவைத்தேடி வாசிப்பது முக்கியம். வாசிக்க வேண்டிய களம் நூலகம். ஆனால், இலங்கையிலுள்ள பொது நூலகங்களில் பெண்கள் வாசிப்பதற்கென தனியான வசதி வாய்ப்புகள் உள்ளனவா என்றால் இல்லை. பொது நூலகங்களில் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்து பெண்களுக்கு தனியான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

பெண்கள் பல பாத்திரங்களை வகிக்கிறார்கள். அது குடும்பத்தில் தொடங்குகிறது. இதனால் சுமைகள் அதிகள். இந்த விடயத்தில் மனப்பாங்கு மாற்றம் வேண்டும். மனித குலத்தின் அடுத்த தரப்பான ஆண்களும் பாத்திரப் பங்கைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் பெண்களும் இந்த மனித குலத்தில் ஒரு பகுதி என்ற அடிப்படையில், அவர்கள் அங்கிகரிக்கப்பட சந்தர்ப்பம் ஏற்படும்.

கல்வியைத் தேடும் ஓர் அறிவாலயமாக, பாடசாலைக்கு அடுத்ததாக நூலகங்கள் உள்ளன. பெண்கள் நூலகங்களைப் பயன்படுத்திக் கொண்டு அறிவாற்றலைப் பெற்று, தமது ஆளுமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.

சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறா

பெண்களுக்கான வாசிகசாலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கல்வித் துறையில் மற்றோர் ஆளுமையாளரான ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறா கூறுகையில், “ வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்ற சான்றோர் கருத்து உள்ளது. அது உண்மையும் கூட. பெண்களுக்கான கல்வி என்பதே கேள்விக் குறியாக இருந்த காலம் மாறி, இப்பொழுது கல்வித் தேடலுக்கான அல்லது அறிவுத் தேடலுக்காக உலகம் பரந்து விரிந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டுப் பெண்களுக்கு பல வழிகள் உள்ளன. எந்த வழி சிறப்பானது என்பதை தேர்வு செய்ய வேண்டிய நிலைமைதான் உள்ளதே தவிர, கல்விக்கான நுழைவாயில் மூடப்படவில்லை.

எங்களை மீள் நிரப்புகின்ற அடுத்த சந்ததிக்கு, நாம் முன்னுதாரணமாய் இருக்க வேண்டும். அதனடிப்படையில் தற்காலப் பெண்கள் சிறந்த உடல், உள ஆரோக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும். உடல் உள ஆரோக்கியம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. உடலை மட்டும் நலமாக வைத்துக் கொண்டால் போதாது; உள்ளத்தையும் நலமாகப் பராமரிக்க வேண்டும்.

பார்த்தல், கேட்டல், சிந்தித்தல் எல்லாமே சிறந்த விடயங்களாக இருந்தால் அத்தகைய தாயின் கருவில் வளரும் குழந்தை, சிறந்த உடல் உள நலத்தோடு தனது வாழ்நாளைக் கடந்து செல்லும். அதுவே ஆரோக்கியமான சமுதாய மீள் நிரப்புதல் என்று கூறலாம். சிறந்த சிந்தனை, செயற்பாடு ஆகியவற்றுக்கு வாசிப்பு அல்லது அறிவுத் தேடல் முக்கியம்.

பாடசாலைக் கல்வி மாத்திரம் அல்ல. நூலகமும் ஓர் அறிவுத் தேடலுக்கான இடம்தான். நூலகங்களை பெண்கள் பயன்படுத்துவது மிக மிகக் குறைவு. வெளி உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை வாசிப்பு வழங்குகின்றது.

பிரச்சினைகளிலிருந்து மீள் எழுதலுக்கான மாற்றுவழிகளையும் அறிவார்ந்த வாசிப்பு வழங்குகின்றது. வாசிப்பு உள ஆரோக்கியத்தை வழங்குகின்றது. டிஜிற்றல் வாசிப்பை விட பாரம்பரிய புத்தக வாசிப்பு எமது உடலுக்கு இன்னமும் சிறப்பானது.

கர்ப்பமடைந்த தாய்மாருக்கு வாசிப்பு பெருந்துணை புரியும். மன அமைதி, ஒழுக்க உணர்வுகளைப் பேணவும் வாசிப்பு உதவும். வாசிப்பதன் மூலம் சிறப்பான மனிதனாக வாழலாம். ஆரோக்கியமான சமுதாயம் உருப்படும். அந்த ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க வாசிப்பு உதவும்.

தற்கால சமுதாயம் வாசிப்புத் திறனற்றவர்களாக இருப்பது எதிர்காலத்துக்கான சாதமாகக் கொள்ள முடியாது. பெண்கள் சிறந்த உற்ற நண்பர்களாக, ஆசான்களாக நூல்களைக் கொண்டிருப்பது ஒரு நல்ல ஆரம்பமாகும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.