;
Athirady Tamil News

திட்டமிட்டு கோவில் சூழல் கடைகளால் ஆக்கிரமிப்பு!! (கட்டுரை)

0

இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருக்கோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது திருக்கோணேஸ்வரம்.

மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருப்பதால் திருக்கோணமலை என்று இந்த நகரம் பெயர்பெற்றது. இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம் கோணேஸ்வரம் ஆதலால் திருகோணமலை எனவும் இந்த நகரம் பெயர் பெறுகின்றது.

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களின் திருத்தலமாகிய திருக்கோணேஸ்வரம் புனிதஷேத்திரமாக இருந்து வந்ததைப் புராண இதிகாச வரலாறுகள் கூறுகின்றன. எனவே இந்தத் தலத்தின் இயல்பான தெய்வீக விசேடத்தினாலே இந்நகரம் திருக்கோணமலை என்ற பெயரால் வழங்கி வருகின்றது.

தெட்சண கயிலாயம் என்று திருக்கோணேஸ்வரம் போற்றப்பட்டு வருகின்றது வடக்கே இமயக்கொடுமுடியில் கயிலாய சிகரத்தில் கயிலை நாதன் எழுந்தருளியிருப்பது போல தெற்கே திருக்கோணமலையில் கோணேசப்பெருமான் அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றார். பூகோள அமைப்பில் இந்த இரண்டு தலங்களும் ஒரு அட்சரரேகையில் அமைந்திருப்பதையும் இவையிரண்டுக்கும் நடுவே தில்லைத் திருத்தலம் அமைந்திருப்பதையும் திருமூல நாயனார் திருமந்திரத்திலே குறிப்பிடுகின்றார். இந்தத் தலங்கள் அமைந்திருக்கும் பாங்கை விஞ்ஞானரீதியாகவும் ஆராய்வது மேலும் திருக்கோணேஸ்வரத்தின் மகிமையை அறிவதற்கு உதவியாயிருக்கும்.

குளக்கோட்டு மன்னனால் திருப்பணிகள் செய்யப்பட்ட சரித்திரி முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோணேஸ்வரர் திருத்தலத்தை பாதுகாப்பதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் அக்கறை செலுத்தவேண்டும் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் 2008க்குப் பின் அவசர அவசரமாக வீதியின் இருமருங்கிலும் தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எந்த உத்தரவும் இன்றி தற்காலிக கடைகளை அமைத்தனர். அக்கடைகள் தற்போது 58ஆக அதிகரித்துவிட்டன. இக்கடைகள் அமைப்பவர்களுக்கும் திருக்கோணேஸ்வரர் கோயிலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. திட்டமிட்டு ஆலயச்சூழலை ஆக்கிரமிப்பது போல் இக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகம் பல இடங்களிலும் முறைப்பாடு செய்த போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

தற்போது திருக்கோணேஸ்வரம் செல்லும் பாதைக்கு அருகில் கோவில் சமதரையில் இவர்களுக்கு நிரந்தர கட்டடம் அமைக்க தொல்லியல் திணைக்களம் திட்டமிட்டு வருகின்றது. 03- 08-2022 இல் தொல்லியல் திணைக்களத்தினால் திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகசபை தலைவர், செயலாளரும் அழைக்கப்பட்டு தெருவோரம் வர்த்தகம் செய்வோருக்கு கோவிலுக்கு சமீபமாக நிரந்தர கட்டடம் அமைக்க தங்களுக்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி அளித்துள்ளதாகவும் அதற்கு ஆலய நிர்வாகம் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக தொல்லியல் திணைக்களம் கோணேஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகளை தடுத்து வருவதை அனைவரும் அறிவர். தேரோடும் வீதியை அகலிக்க தடுத்தனர். வாசலில் பெருங்கோபுரம் கட்டுவதற்கு திணைக்களம் இடையூறுகளை விளைவித்து வருகிறது. தற்போது இந்திய அரசாங்கத்திடம் திருக்கோணேஸ்வரத்தின் பாரிய திருப்பணி வேலைகளை நிறைவேற்றித் தருமாறு ஆலய அறங்காவலர் சபையும், இந்து சமய நிறுவனங்களும் வேண்டுதல் விடுத்து அவை சாதகமாக அமைய உள்ள நேரத்தில் திட்டமிட்டு ஆலய சுற்றாடலை அபகரிக்கும் நோக்கில் நிரந்தர கடைகளை கட்டுவதற்கு முயற்சி எடுக்கின்றனர். இவ்விடயத்தை கருத்தில் கொண்டு சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும்.

இதேவேளை தொல்லியல் திணைக்களத்தின் இந்த நடவடிக்கைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம், மூதூர் பிரசேச இந்து குருமார் சங்கம் ஆகியன கடும் கண்டனத்தை வெளியிட்டு உள்ளன.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் சிவாலயத்தை சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சி தீவிர மடைந்திருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பியான செல்வராஜா கஜேந்திரன் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் அங்கமாக உள்ள தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தமிழ் மக்களின் பாரம்பரியங்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்காலிகமாக வழங்கப்பட்ட கடை தொகுதியை நிரந்தரமாக வழங்க தொல்பொருள் திணைக்களம் முயற்சிப்பது முற்றிலும் தவறானது. திருக்கோணேஸ்வரத்தை பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலை உடன்நிறுத்த வேண்டும் என்றார் கஜேந்திரன் எம்.பி.
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சுற்றாடலில் திருக்கோணேஸ்வரர் ஆலய திருப்பணியை மட்டும் தொல்லியல் திணைக்களம் தலையீடு செய்து திருப்பணிகளை தடுத்து வருகின்றது. திருக்கோணேஸ்வரம் இந்திய மக்களுடனும் தொடர்புடைய கோயில் இந்திய அரசாங்கமும் திருக்கோணேஸ்வரர் திருப்பணி தொடர்பாக விரைவில் செயற்படுவதற்கு பிரதமரும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன் அக்கறை செலுத்தவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.