;
Athirady Tamil News

அரசாங்கத்துக்குள் பனிப்போர் !! (கட்டுரை)

0

மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த சகல தென்பகுதி அரசியல் கட்சிகளும், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால், அது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது, இப்போது புலனாகி வருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதைப் பற்றி ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், அவரது பாணியில், சர்வகட்சி அரசாங்கம் கைகூடாத வகையிலும் நடந்து கொள்வதாகவே தெரிகிறது. ஆரம்பத்தில், அரசாங்கத்தில் இணைய சாடையாக விருப்பத்தைத் தெரிவித்து வந்த சில எதிர்க்கட்சிகளும், இப்போது விடாப்பிடியாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றுக்கான வேலைதிட்டத்தை கேட்டுக் கொண்டே இருக்கின்றன. ஜனாதிபதி அதைக் காதில் போட்டுக் கொள்ள விரும்பவில்லை.

ஜனாதிபதி ரணில், அரசியல் தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவர். எனவேதான், பொருளாதார நெருக்கடியின் காரணமாக, செய்வதறியாது இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு மே மாதம் அழைப்புவிடுத்த போது, நாடாளுமன்றத்தில் ஓர் ஆசனத்தை வைத்துக் கொண்டும், அவர் அதனை ஏற்றுக் கொண்டார்.

ஆனால், பின்னர் மக்கள் போராட்டத்தை அடக்க நடவடிக்கை எடுத்த ரணில், அதற்காக ஜனாதிபதி கோட்டாபயவை தூண்டவில்லை. மாறாக, போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவே ரணில் கூறினார். அப்போது அது கிண்டலாக பலருக்கு தெரிந்தாலும், அவர் உண்மையிலேயே போராட்டம் வலுவடைவதை விரும்பியிருக்கிறார்.

ஏனெனில், போராட்டத்தின் காரணமாக கோட்டா பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டால், தமக்கே ஜனாதிபதியாவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும்.

அதேபோல், அவர் சர்வகட்சி அரசாங்கம் என்ற கருத்தையும் மற்றவர்களை மடக்க மிகச் சாதுரியமாகப் பாவித்துள்ளார். மக்கள் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, ஜூலை ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி பதவியைத் தாம் இராஜினாமாச் செய்வதாக கோட்டாபய அறிவித்த போது, பிரதமர் ரணிலும் இராஜினாமாச் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். இதனை அடுத்து, நாடாளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் அந்தக் கோரிக்கை ஆராயப்பட்டு, பிரதமரும் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று ஜூலை 10ஆம் திகதி முடிவு செய்யப்பட்டது.

அது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால், அவருக்கு அன்றே அறிவிக்கப்பட்டது. அப்போது ரணில், “சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருக்கும் நிலையில், அரசாங்கம் ஒன்று இல்லாத நிலை, நாட்டில் இருக்க முடியாது. எனவே, கட்சித் தலைவர்கள் சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் நான் இராஜினாமாச் செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, ஜூலை 12ஆம் திகதி, கோட்டா இராஜினாமாச் செய்தார். ரணில் பதில் ஜனாதிபதியானார். சர்வகட்சி அரசாங்கம் என்பது, இழுபறியில் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் அவர் வெற்றி பெற்றார். அதனை அடுத்து, அவர் போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்து, கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்தார். அத்தோடு அவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற கூச்சலும் மறைந்துவிட்டது.

இப்போதும் அவர், சர்வகட்சி அரசாங்கம் என்ற விடயத்தைக் காட்டி, மிகச் சாதுரியமாக ஏனைய கட்சிகளின் கவனத்தை திசைதிருப்பி வருகிறார். எனினும், இந்தத் தந்திரம் இப்போது சில கட்சிகளுக்கு தெரிந்துவிட்டது.

இதனை தமக்குச் சாதகமாக பாவித்துக் கொள்ள, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் முயல்கிறார்கள். அதன்படி, சர்வகட்சி அரசாங்கம் நடைமுறைச் சாத்தியமாகாவிட்டால், பொதுஜன பெரமுனவுக்கு அமைச்சரவையை நியமிக்க இடமளிக்குமாறு பசில் கூறியிருக்கிறார்.

இதனிடையே, ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள், சிறிது சிறிதாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அவருக்கும் அக்கட்சிக்கும் இடையே கொள்கை ரீதியான அடிப்படை வேறுபாடுகள் இல்லாவிட்டாலும், சில நடைமுறை வேறுபாடுகள் இருக்கின்றன.

ஜனாதிபதியின் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் பொதுஜன பெரமுனவும் கண்மூடித்தனமாக, தாராள பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்கும் கட்சிகள். இரு கட்சிகளின் தலைவர்களும், கடந்த காலத்தில் நாட்டை கடன்கார நாடாக மாற்றியதில் பெரும் பங்கை ஆற்றியவர்கள். இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும், நாட்டில் பாரியளவில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஈடுபட்டவர்கள் ஆட்சி மாறிய காலத்திலாவது சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அதைத் தான் “அவர்கள் எல்லோரும் நண்பர்கள் தம்பி; நாட்டில் ஒருபோதும் எந்தவொரு பெரிய திருடனும் கைது செய்யப்பட மாட்டான்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒருமுறை ஊடகவியலாளரிடம் கூறினார்.

இனப்பிரச்சினை விடயத்தில், நடவடிக்கை எடுக்கும் போதும் எந்தவொரு பிரதான கட்சியும் பெரும்பான்மை ஆதிக்கவாதத்தை மீறத் தயாராக இல்லை.

எனவே, இவ்விரண்டு கட்சிகளும் ஒன்றுதான். ஆனால், இவ்விரு கட்சிகளிடையே சில நடைமுறை வேறுபாடுகள் இருக்கின்றன. மேற்கத்தேய ஆதிக்கத்தை, ஐ.தே.க கூடுதலாக ஆதரிக்கும் கட்சியாகும். அண்மைக் காலத்தில், இதில் சில மாற்றங்களும் இல்லாமல் இல்லை.

பொதுஜன பெரமுன, சீனாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் கட்சியாகும். சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்குவதற்கு அதுவும் ஒரு பலமான காரணமாகும். அவற்றுக்குப் புறம்பாக, இரு கட்சிகளுக்கிடையே அதிகாரப் போட்டி மனப்பான்மையும் இருக்கிறது.

அந்த நிலையில் தான், பொதுஜன பெரமுனவின் ஆதரவில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செயயப்பட்டுள்ளார். இது தற்காலிக ஏற்பாடாகும். ரணிலுக்கு தமது கட்சியின் மேம்பாட்டுக்காகவும் தமது சொந்த மேம்பாட்டுக்காகவும் ஜனாதிபதியாகும் அவசியம் இருந்தது. மக்களின் எழுச்சியின் காரணமாகப் பின்வாங்கிய பொதுஜன பெரமுனவுக்கு, தற்காலிகமாக தமக்காக ஆட்சியைப் பிடித்து வைத்திருக்கத்தக்க ஒருவர் தேவைப்பட்டது. அதன் விளைவாகவே, ஜூலை 20ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் ஆதரவில், ரணில் ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டார்.

இப்போது, தமது கட்சியைப் பலப்படுத்த ரணில் ஜனாதிபதி பதவியை பாவிக்கிறார். பொதுஜன பெரமுனவும் தாம் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிக் கொள்ள முயன்று வருகிறது.

இதனால், ஏற்கெனவே சில முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. இந்தப் பனிப்போரின் போது, நிறைவேற்று அதிகாரம் என்ற ஆயுதம் ஜனாதிபதியிடம் இருக்கிறது. ஜனாதிபதியின் திட்டங்களை நாடாளுமன்றத்தில் தோல்வியுறச் செய்யும் பெரும்பான்மை பலம், பொதுஜன பெரமுனவிடம் இருக்கிறது.

ஜனாதிபதி பதவியை ஏற்றவுடனேயே, ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியைச் சேர்ந்த தலைவர்களை, தமது ஆலோசகர்களாக நியமித்துக் கொண்டார். அதேவேளை, அவர்களுக்கு சில துறைகளில் முக்கிய பொறுப்புகளையும் வழங்கினார். அவர்களும் அமைச்சர்களைப் போல் தான் செயற்படுகிறார்கள்.

திங்கட்கிழமை (22) வடமத்திய மாகாணத்துக்குச் சென்ற ஜனாதிபதி, அம் மாகாண பிரதம மகாநாயக்க பல்லேகம சிறிநிவாச தேரரை சந்தித்த போது, உரமானியம் வழங்குவது தொடர்பாக கருத்துத் தெரிவித்தார்.

அப்போது, அதனை விவரிக்குமாறு, அவர் தமது சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்கவை கேட்டுக் கொண்டார். உரமானியம் வழங்குவதற்காக உலக வங்கியோடு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக சாகல கூறினார். நாட்டைப் பொறுத்தவரை அதில் ஏதும் தவறில்லை. ஆனால், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அமைச்சர்களைப் போல் நடந்து கொள்வது, இரு கட்சிகளிடையே முறுகல் நிலைக்கு வித்திடலாம்.

பொதுஜன பெரமுன, பெரும்பான்மையின மக்களின் வாக்குகளையே நம்பியிருக்கிறது. அதற்காகக் கடந்த தேர்தல் காலங்களில், சிறுபான்மை மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரமாக இனவாதத்தைப் பாவித்தது.

ஆனால், ஐ.தே.க சிறுபான்மையினரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறது. எதிர்வரும் தேர்தல்களின் போது, மீண்டும் இனவாதத்தைத் தூண்டும் நோக்கத்துடனேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடும் இனவாதியான கலகோட அத்தே ஞானசார தேரர் தலைமையில், ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்ற வாதத்தை அமலாக்குவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க, செயலணி ஒன்றை நியமித்தார். ஜனாதிபதி ரணில், இந்தச் செயலணியின் அறிக்கையை ஏற்க மறுத்ததாக செய்திகள் கூறின.

ஜனாதிபதி கோட்டாபய, 2021ஆம் ஆண்டு, பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் நபர்களையும் தடைப் பட்டியலில் சேர்த்தார். ஜனாதிபதி ரணில், ஓகஸ்ட் முதலாம் திகதி அவற்றில் ஆறு அமைப்புகளையும் 316 நபர்களையும் அப்பட்டியலில் இருந்து நீக்கினார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில், அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காகியதாக கூறப்படும் சில நபர்களுக்கு, நட்டஈடு வழங்க வேண்டும் என்று அண்மையில் பொதுஜன பெரமுன கூறியிருந்தது. இதனை ரணில் ஏற்றுக் கொண்டால், அவரது காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காகியதாக, அவரே அவர்களுக்கு நட்டஈடு வழங்கும் மிக விந்தையான நிலைமை உருவாகும். இதுவும் இரு சாராருக்கிடையே முரண்பாட்டை வலுக்கச் செய்யும் விடயமாகும்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், தமது கட்சியால் பரிந்துரை செய்யப்படுவோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுன விடாப்பிடியாக இருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கருத்தை ஜனாதிபதி நிராகரித்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

இவை அனைத்தும், புதிய கொந்தளிப்புகளைத் தோற்றுவிக்கும் விடயங்களாகும். பாரியதொரு பொருளாதார நெருக்கடியின் மத்தியிலேயே ஜனாதிபதி இவற்றை சமாளிக்கப் போகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.