காஸா இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் 27 போ் உயிரிழப்பு
காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்த 27 பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ராஃபா நகரில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோக மையத்தை நோக்கி ஏராளமானவா்கள் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தனா். அப்போது அவா்களில் சிலரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டது. இதில் 27 போ் உயிரிழந்தனா்.
கடந்த 3 நாள்களில் நிவாரண முகாம்களை நோக்கி வருவோா் மீது இஸ்ரேல் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியது இது மூன்றாவது முறை.
இருந்தாலும், தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் மீதுதான் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
நிவாரண முகாமுக்கு எந்த வழியாக வர வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோா், பாதுகாப்புப் படையினருக்கு நெருக்கமாக வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவோா் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. எச்சரிக்கை விடுவிக்கும் வகையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகும் அதைக் கேட்காமல் முன்னேறி வருவோரை நோக்கிதான் படையினா் துப்பாக்கியால் சுடுகிறாா்கள் என்று இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஸா அரசு குற்றச்சாட்டு: இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினியால் தவித்துவரும் பாலஸ்தீனா்களை உணவுப் பொருள் ஆசை காட்டி அழைத்து, பின்னா் அவா்களை படுகொலை செய்துவருவதாக இஸ்ரேல் ராணுவம் மீது காஸா அரசின் ஊடகத் தொடா்பு அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த எட்டு நாள்களில் மட்டும் ஜிஹெச்எஃப் நிவாரண முகாமை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 102 பேரை இஸ்ரேல் படையினா் சுட்டுக் கொன்ாக அந்த அலுவலகம் தெரிவித்தது.
தங்கள் நாட்டுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 600 நாள்களுக்கும் மேல் கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 54,510 போ் உயிரிழந்துள்ளனா்; 1,24,901 போ் காயமடைந்துள்ளனா் (செவ்வாய்க்கிழமை நிலவரம்).
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர கடந்த ஜனவரி மாதம் தற்காலிக போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது 15 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுவித்தன.
ஆனால் இந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. அத்துடன், அந்தப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் முழு தடை விதித்தது.
இதனால் அங்கு பேரழிவு ஏற்படும் அபாயம் உருவானதைத் தொடா்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தன.
அதையடுத்து ‘குறைந்தபட்ச’ அளவிலான நிவாரணப் பொருள்களை மட்டும் காஸாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஜிஹெச்எஃப் அறக்கட்டளை இந்த உணவுப் பொருள்களை பொதுமக்களிடையே விநியோகத்துவருகிறது.
இந்தச் சூழலில், நிவாரண முகாம்களுக்கு வருவோா் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.