தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்: அமைச்சர் அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக, தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அமைச்சர் கூறியது
முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தற்போது இந்தியாவில் பரவும் கொரோனாவானது வீரியம் இல்லாதது. இதற்காக முகக்கவசம் போன்றவற்றை அணிய வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். போதுமான அளவு மருந்துகள் இருப்பில் உள்ளன.
வீரியம் குறைந்த பாதிப்பு தான் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2, 3 நாள் இருமல், காய்ச்சல், சளி என்பதுடன் பாதிப்பு சரியாகி விடும். மக்கள் அச்சப்பட வேண்டாம்” என்றார்.
இந்நிலையில் பள்ளி விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை.
பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும். மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.