;
Athirady Tamil News

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி; வெளியான மேலதிக தகவல்

0

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல், ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் பிரதேசவாசிகள் மாணவியை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் புதிய மாணவி ஒருவர் அதன் அருகிலுள்ள குளத்தில் குதித்த சம்பவம் நேற்று முன்தினம் (02) மாலை பதிவாகியிருந்தது.

இதன்போது மாணவியை மீட்க பிரதேசவாசிகள் உடனடி நடவடிக்கை எடுத்த போது அதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருந்தார்.

பின்னர் மாணவி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவரது நிலை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டி பொலிஸார் மாணவியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன், அதில் குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் தான் தாங்க முடியாத துன்பங்களுக்கு ஆளானதாகக் அவர் கூறியுள்ளார்.

தாம் சொல்ல முடியாத சித்திரவதைகளை எதிர்கொண்டதாகவும் பொலிஸாரிடம் அம்மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பின்னர் குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர், சந்தன அபயாலாலிடம் இது குறித்து வினவிய போது, சம்பவம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரி மட்டத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

இத்தகைய சூழலில், மாணவியை பகிடிவதை செய்ததாக கூறப்படும் தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்று சிரேஸ்ட மாணவர்களும், மாணவி ஒருவரும் இன்று குளியாப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

பகிடிவதை சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.